Home இலங்கை அரசியல் இலங்கை அரசியலில் ஏற்பட்ட மாற்றம் – முன்னாள் ஜனாதிபதிகள் எடுத்துள்ள தீர்மானம்

இலங்கை அரசியலில் ஏற்பட்ட மாற்றம் – முன்னாள் ஜனாதிபதிகள் எடுத்துள்ள தீர்மானம்

0

முன்னாள் ஜனாதிபதிகள் தொடர்பான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்ச மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் தங்கள் உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்க தயாராகியுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதிகளின் ஊடக தொடர்பாளர்கள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்டமூலம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு நேற்று முன்தினம் கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறியுள்ளார் என நெருங்கிய உதவியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி சில உடைமைகளை அகற்றிவிட்டு பத்தரமுல்லையில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்றுள்ளார்.

உத்தியோகபூர்வ இல்லம்

இந்த நிலையில், ஜனாதிபதியின் உரிமை சட்டமூலம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது உத்தியோகபூர்வ இல்லத்தை ஒப்படைக்கத் தயாராக உள்ளார் என்று அவரது ஊடகப் பேச்சாளர், வழக்கறிஞர் மனோஜ் கமகே குறிப்பிட்டுள்ளார்.

சட்டப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவுடன் அரசாங்கம் அதற்கேற்ப செயல்படும் என்று அவர் வலியுறுத்தினார்.

கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள தற்போதைய உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுவது குறித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தினர் முடிவெடுப்பார்கள் என வழக்கறிஞர் மனோஜ் கமகே மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கொழும்பு 7, நிதாஹஸ் மாவத்தையில் அமைந்துள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறத் தயாராகி வருவதாக அவரது ஊடகப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.


அரச வரப்பிரசாதங்கள்

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் உரிமைகளை நீக்குவதற்கான சட்டமூலத்தை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த பிறகு, பல தரப்பினர் அதற்கு எதிராக நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர், ஆனால் இந்த சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இலங்கை அரசியல் வரலாற்றில் முதன்முறையாக முன்னாள் ஜனாதிபதிகளுக்கான அரச வரப்பிரசாதங்கள் அநுர அரசாங்கத்தினால் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version