இலங்கையில் (Sri Lanka) 67 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்குவதற்கான பிரேரணை தொடர்பான விசேட குழுவின் அறிக்கை எதிர்வரும் 2 வாரங்களுக்குள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விடயத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando)தெரிவித்துள்ளார்.
அத்துடன், 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகை என்ற நாட்டின் லட்சிய இலக்கை அடைவதற்கு அதிக நாடுகளில் சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா வழங்க வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்
நோக்கம்
இந்த நிலையில், நாட்டிற்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கத்தில் பல முயற்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் 33% பேர் மீண்டும் மீண்டும் வருபவர்கள் என்றும் அதனால்தான் “Sri Lanka – You Come Back for More” என்ற டேக்-லைனை விளம்பரப்படுத்த அரசாங்கம் உத்தேசித்திருப்பதாகவும் அமைச்சர் ஹரின் பெர்ண்டாவோ கூறியுள்ளார்.
சுற்றுலாப் பயணிகளின் வருகை
இதேவேளை, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அறிக்கையின்படி, இந்த வருடத்தில் இதுவரை 966,604 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
மேலும், ரஷ்யா, இந்தியா, ஜேர்மனி, பிரித்தானியா, சீனா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்நாட்டிற்கு வந்துள்ளதாகவும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.