Home இலங்கை அரசியல் யாழ்ப்பாணத்துக்கு செல்ல தயங்கும் கோட்டாபய ராஜபக்ச

யாழ்ப்பாணத்துக்கு செல்ல தயங்கும் கோட்டாபய ராஜபக்ச

0

Courtesy: Sivaa Mayuri

2011ஆம் ஆண்டு காணாமல் போன இரண்டு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தொடர்பில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தைத் தவிர நாட்டின் எந்த நீதிமன்றத்திலும் சாட்சியமளிக்கத் தயார் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்றத்தில் நேற்று (22.10.2024) நடைபெற்ற விசாரணையின் போது, அவரது சட்டத்தரணி ரொமேஸ் டி ஊடாக இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் 2011ஆம் ஆண்டு காணாமல் போன செயற்பாட்டாளர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் கடத்தப்பட்டமை தொடர்பான வழக்கில், அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த ராஜபக்ச, யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றில் சாட்சியமளிக்க முதலில் அழைக்கப்பட்டிருந்தார்.

பாதுகாப்புக் கவலை

எனினும், பாதுகாப்பு காரணங்களால் அங்கு முன்னிலையாக முடியவில்லை என அவர் கூறியிருந்தார்.

இந்தநிலையில், கோட்டாபய ராஜபக்ச, யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியாது என்றாலும், இலங்கையில் உள்ள வேறு எந்த நீதிமன்றத்திலும் சாட்சியங்களை சமர்ப்பிக்கத் தயாராக இருப்பதாக அவரின் சட்டத்தரணி நேற்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னைய தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக் கவலை நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

விசாரணை

இதனையடுத்து, விசாரணையை 2025 மார்ச் 18ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

முன்னதாக, 2019இல் ஜனாதிபதியாக இருக்கும்போது கோட்டாபய இந்த வழக்கு தொடர்பான விசாரணையை தவிர்த்து வந்தார்.

எனினும், தற்போது பதவியில்லாமையால், அவரை சாட்சியமளிக்க அழைக்கலாமா என்பதை உயர்நீதிமன்றம் அடுத்த அமர்வின் போது, தீர்மானிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version