தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளில் உள்ள சில கேள்விகள் கசிந்ததாக கூறப்படும் விடயம் தொடர்பில் குற்றவியல் விசாரணை திணைக்களம் மற்றும் பரீட்சைகள் திணைக்களம் தமது விசாரணைகளை முடித்த பின்னரே பரீட்சையை மீண்டும் நடத்துவதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் கண்டறியப்படும் விடயங்கள் மற்றும் வழங்கப்படும் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
மூவர் சேவையிலிருந்து நீக்கம்
இதேவேளை தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்படுவதற்கு முன்னர் வினாத்தாளைக் கையடக்க தொலைபேசியில் புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் ஊடாக பகுதிநேர வகுப்பு ஆசிரியர்கள் சிலருக்கு அனுப்பியதாகக் கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அநுராதபுரம் – ரத்மலே திஸ்ஸ கல்லூரியின் பரீட்சை மண்டபத்தில் சேவையாற்றிய பரீட்சை மண்டப பொறுப்பதிகாரி உள்ளிட்ட 3 பேரே சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த சம்பவம் தொடர்பில் அவர்களிடம் வடமத்திய மாகாண கல்வி திணைக்களம் அண்மையில் வாக்குமூலம் பதிவு செய்திருந்த நிலையில் அதற்கமைய, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய குறித்த பேரும் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.