பாடசாலை மாணவர்களுக்கான தலைமுடி அலங்காரம் மேற்கொள்ளும்போது உரிய
ஒழுங்குமுறைகளைப் பின்பற்றவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ஒவ்வொரு அழகியல் நிலையத்தினருக்கும் அந்தப் பொறுப்பு உள்ளதாக ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநருக்கும் அழகியல் சங்கத்தினருக்கும் இடையில் இன்று (24) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முறையற்ற நடவடிக்கை
குறிப்பாக ஒரு சில அழகியல் சங்கங்கள் கட்டுப்பாடுகளை
மீறிச் செயற்படுவது தொடர்பில் தெரிவிக்கப்பட்டது.
சில சங்க
உறுப்பினர்கள் சட்டத்துக்கு முரணான செயற்பாடுகளுக்கும் துணைபோகின்றனர்
என்றும், கடமை நேரத்தில் நாகரீகமற்ற முறையிலும் செயற்படுகின்றனர் எனவும்
ஆளுநருக்கு சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான செயற்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க
முடியாது எனத் தெரிவித்த ஆளுநர், விரைவில் உள்ளூராட்சி ஆணையாளர், உள்ளூராட்சி
உதவி ஆணையாளர், சுகாதார மருத்துவ அதிகாரிகள், தொழிற்திணைக்களத்தினர்,
பொலிஸாருடன் கலந்துரையாடலை ஒழுங்கு செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உரிமப் பத்திரம்
ஒழுங்குமுறைகளை உரிய வகையில் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்கும் அதனைக்
கண்காணிப்பதற்கும் ஏற்பாடுகளை மேற்கொள்வதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றங்களால் ஆண்டு தோறும் வியாபார உரிமத்துக்கான கட்டணம்
அறவிடப்பட்டாலும், உரிமப் பத்திரம் வழங்கப்படுவதற்கு மிக நீண்ட காலம்
எடுக்கின்றது என்றும் அழகியல் சங்கத்தினரால் சுட்டிக்காட்டப்பட்டதுடன் அதற்குரிய
நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆளுநர் பதிலளித்தார்.
மேலும் இராணுவத்தினரால்
வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சியில் அழகியல் நிலையங்கள் இயக்கப்படுவதால் தமது
வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.
இது
தொடர்பில் இராணுவத் தளபதியுடன் பேச்சு நடத்துவதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
