Home முக்கியச் செய்திகள் யாழ்ப்பாணத்தில் கொட்டித்தீர்த்த மழை : வெளியானது முழுமையான விபரம்

யாழ்ப்பாணத்தில் கொட்டித்தீர்த்த மழை : வெளியானது முழுமையான விபரம்

0

கடந்த நவம்பர் மாதம் 18ஆம் திகதி முதல் டிசம்பர் 1ஆம் திகதி வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாண(jaffna) மாவட்டத்தில் 697.4 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகி உள்ளது. குறிப்பாக நவம்பர் மாதம் 26 ஆம் திகதி 24 மணி நேரத்திலே 253 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ளது. இது ஒரு பாரிய அளவாக காணப்படுகின்றது என யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் இன்றையதினம் (01) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

73 ஆயிரத்து 693 பேர் மழை வெள்ளத்தினால் பாதிப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 21 ஆயிரத்து 980 குடும்பங்களைச் சேர்ந்த 73 ஆயிரத்து 693 பேர் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். 29ஆம் திகதி நவம்பர் மாதம் வரை 82 பாதுகாப்பு நிலையங்களில் 2,163 குடும்பங்களைச் சேர்ந்த 7417 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். டிசம்பர் முதலாம் திகதி 26 பாதுகாப்பு நிலையங்களில் 692 குடும்பங்களை சேர்ந்த 2393 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

மழை வீழ்ச்சியினுடைய தன்மை அல்லது அளவு குறைவடைந்து காணப்படுகின்றமையால் மக்கள் தங்களுடைய வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள். இருந்த போதிலும் பல இடங்களில் வெள்ள நீரோட்டம் இயல்பான நிலையில் காணப்படாத நிலையில் வெள்ளம் காணப்படுகின்றது. இவ்வாறான பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்தும் பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்குரிய சமைத்த உணவு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

சில பிரதேச செயலாளர் பிரிவில் அரசாங்க நிதி ஒதுக்கீட்டின் மூலம் சமைத்த உணவு வழங்கப்படாமையை அவதானிக்க முடிந்தது. உடனடியாகவே அந்த மக்களுக்கு தேவையான காலப்பகுதிகளுக்கு சமைத்த உணவை அரச நிதியின் மூலம் வழங்குவதற்கு பிரதேச செயலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளேன்.

உப்புக்கேணி கிராமத்தில் தொடர்ந்தும் வெள்ளம்

சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட உப்புக்கேணி என்ற பகுதியில் நீர் வழிந்து ஓட முடியாமல் 50 குடும்பங்கள் தங்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கி இருக்கிறார்கள். வெள்ளநீர் உடனடியாக வழிந்தோடக்கூடிய சாத்தியப்பாடு இல்லாத காரணத்தினால் நீர் இறைக்கும் இயந்திரங்கள் மூலம் அந்த நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது.

அதேபோல பல்வேறுபட்ட முறைப்பாடுகளும் எங்களுக்கு கிடைத்த வண்ணம் உள்ளன. அந்த வகையிலே இந்த வெள்ளம் வழிந்து ஓட முடியாத நிலை தொடர்ந்து காணப்படுமாயின் அதற்குரிய பொருத்தமான பொறிமுறை மூலம் அந்த வெள்ளம் அகற்றப்பட இருக்கின்றது.

தொடர்ச்சியாக எதிர்வரும் காலங்களில் இவ்வாறான வெள்ள நிலவரங்கள் ஏற்படும் பட்சத்தில் நாங்கள் முற்கூட்டியே வடிகால் அமைப்பு முறைகளை சரியான விதத்தில் பேணிக்கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது. இதற்காக அனைத்து திணைக்களங்களின் ஒத்துழைப்பையும் நாங்கள் எதிர்பார்த்து நிறகின்றோம்.

எதிர்வரும் காலத்தில் நாங்கள் பிரதேச செயலர் ரீதியாக, எந்தெந்த பிரதேசங்களில் வெள்ளம் வழிந்து ஓட பொருத்தமான முறை இல்லை என்ற தரவுகளைப் பெற்று, அதற்கு தீர்வை காண்பதற்கு அனைத்து திணைக்களங்களையும் ஒருங்கிணைத்து, நேரடியாக அந்த பகுதிக்கு சென்று என்னென்ன விடயங்களை முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பான விடையங்களை பெற்று, அதற்குரிய நிதி ஒதுக்கீட்டினை அமைச்சின் மூலம் பெற்று அதற்குரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது.

ஆகவே அனைத்து திணைக்களங்களிடமும் அதற்கான உதவி எங்களால் கோரப்பட இருக்கின்றது என்றார்.  

NO COMMENTS

Exit mobile version