Home முக்கியச் செய்திகள் ரஷ்யாவிற்கு எப்படி தப்பினார் சிரிய ஜனாதிபதி : வெளிவந்தன தகவல்

ரஷ்யாவிற்கு எப்படி தப்பினார் சிரிய ஜனாதிபதி : வெளிவந்தன தகவல்

0

 சிரியாவில்(syria) கிளர்ச்சி படைகள் தலைநகரை கைப்பற்றும் முன்பே அந்நாட்டின் ஜனாதிபதி பசார் அல் ஆசாத்(bashar al assad) அங்கிருந்து தப்பி ரஷ்யா சென்றடைந்தார்.

எனினும் அவர் சென்ற விமானத்துடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் அவரது விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் அல்லது சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி அவர் பத்திரமாக ரஷ்யாவில்(russia) தரையிறங்கியுள்ளார்.இந்த நெருக்கடியான சூழலில் அவர் எவ்வாறு ரஷ்யா சென்றடைந்தார் என்ற தகவலை ரஷ்ய உளவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிரிய ராணுவ தளபதிகள் கிளர்ச்சிக் குழுவுடன் ரகசியமாக கைகோர்ப்பு

கடந்த நவம்பர் இறுதியில் ஜனாதிபதி ஆசாத்துக்கு எதிராக மிகப் பெரிய போரை எச்டிஎஸ் கிளர்ச்சிக் குழு தொடங்கியது. ஆசாத் படையில் இருந்த பல்வேறு ராணுவ தளபதிகள் கிளர்ச்சிக் குழுவுடன் ரகசியமாக கைகோர்த்தனர். இதன் காரணமாக அலெப்போ உள்ளிட்ட நகரங்களில் கிளர்ச்சிக் குழு வீரர்களுடன் ராணுவ வீரர்கள் போரில் ஈடுபடவில்லை.

தீவிர போரை தொடங்கிய 13 நாட்களில் தலைநகர் டமாஸ்கஸை கிளர்ச்சிக் குழுக்கள் சுற்றிவளைத்தன. அங்கும் ஜனாதிபதி ஆசாத் படை வீரர்கள் போரில் ஈடுபடவில்லை.

 கத்தார் தலைநகர் தோஹாவில் முக்கிய பேச்சுவார்த்தை 

இதனிடையே துருக்கி(turkey), ரஷ்யா(russia), ஈரான் (iran)நாடுகளின் மூத்த அதிகாரிகள், கத்தார் (qatar)தலைநகர் தோஹாவில் கடந்த 7-ம் திகதி முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். கிளர்ச்சிக் குழுக்கள் சார்பில் துருக்கி அதிகாரிகளும் ஜனாதிபதி ஆசாத் சார்பில் ரஷ்யா, ஈரான் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டது.

ஜனாதிபதி பதவியிலிருந்து விலகி ஆசாத் பத்திரமாக வெளியேற கிளர்ச்சிக் குழுக்கள் ஒப்புக் கொண்டன. இதேபோல சிரியாவின் லடாகியாவில் உள்ள ரஷ்ய கடற்படைத் தளம், சிரியாவின் கிமெய்மிம் பகுதியில் உள்ள ரஷ்ய விமானப் படைத் தளம் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என்று கிளர்ச்சிக் குழுக்கள் உறுதி அளித்தன.

ரஷ்ய கடற்படை தளத்திற்கு இரகசியமாக சென்ற ஆசாத்

இதைத் தொடர்ந்து கடந்த 7-ம் திகதி நள்ளிரவில் சிரிய ஜனாதிபதி ஆசாத் டமாஸ்கஸில் உள்ள தனது மாளிகையில் இருந்து லடாகியாவில் உள்ள ரஷ்ய கடற்படைத் தளத்துக்கு ரகசியமாக சென்றார். அங்கிருந்து கடந்த 8-ம் திகதி சிறப்பு விமானம் மூலம் அவர் ரஷ்ய தலைநகர் மொஸ்கோவை சென்றடைந்தார்.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாகவே ஜனாதிபதி ஆசாத்தின் மனைவி அஸ்மா மற்றும் 2 மகன்கள், ஒரு மகள் ஆகியோர் ரஷ்யாவில் தஞ்சமடைந்து விட்டனர். தற்போது ஜனாதிபதி ஆசாத்தும் அவரது குடும்பத்தினரும் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர் என்று ரஷ்ய உளவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒருபோதும் கைவிட மாட்டோம்

ஆஸ்திரியாவில் உள்ள ரஷ்ய தூதர் உலினோவ் கூறும்போது, “சிரிய ஜனாதிபதி ஆசாத்துக்கு மனிதாபிமான அடிப்படையில் ரஷ்யா அடைக்கலம் அளித்துள்ளது. எங்களது நண்பர்களை நாங்கள் ஒருபோதும் கைவிட மாட்டோம்” என்று தெரிவித்தார்.

ரஷ்ய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மரியா கூறும்போது, “விமான விபத்தில் ஜனாதிபதி ஆசாத் உயிரிழந்துவிட்டதாக மேற்கத்திய ஊடகங்கள் பொய்களை பரப்பின. இதற்காக மேற்கத்திய ஊடகங்கள் வெட்கி தலைகுனிய வேண்டும்” என்று தெரிவித்தார். 

NO COMMENTS

Exit mobile version