முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் அதிகரித்துள்ள சட்டவிரோத மணல்
அகழ்வுச் செயற்பாடுகளுக்கு பொலிஸாரே காரணமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இன்று(03) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“சட்டவிரோத மணல் அகழ்வைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் தொடர்ச்சியாகப்
பேசப்பட்டு வருகின்றது. இருப்பினும், சட்டவிரோத மணல் அகழ்வுச் செயற்பாடுகள்
தொடர்ச்சியாக மிக அதிகளவில் மேற்கொள்ளப்படுகின்ற நிலையே காணப்படுகின்றது.
பொலிஸார் மீது குற்றச்சாட்டு
இவ்வாறு இங்கு சட்டவிரோத செயற்பாடுகள் தலைவிரித்தாடுகின்ற போது, சட்டம்
ஒழுங்கு முறையாக பேணப்படுவதாக பொலிஸாரோ, சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய
ஏனைய தரப்பினரோ போலிக் கருத்துக்களை இங்கு தெரிவித்துக் கொண்டிருக்கத்
தேவையில்லை.
தற்போது இந்த நாட்டில் ஆட்சி பீடத்திலுள்ள அரசாங்கமும், அரசத் தலைவரும் கூட இந்த
நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுமெனக் கூறுகின்றனர். நாமும் சட்டம்
ஒழுங்கு முறையாகப் பாதுகாக்கப்பட வேண்டுமென்றே தொடர்ந்து வலியுறுத்துகின்றோம்.
ஆனால், இங்கு சட்டம் ஒழுங்கு சீரின்றியே காணப்படுகின்றது. சட்டம் ஒழுங்கை
பாதுகாக்க வேண்டிய பொலிஸார் மீதே நாம் குற்றச்சாட்டு முன்வைக்க வேண்டியுள்ளது.
பொலிஸார் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமையினாலேயே இவ்வாறான சட்டவிரோத மணல்
அகழ்வுகள் உள்ளிட்ட, பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்ந்தும்
இடம்பெற்று வருகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.
