Courtesy: H A Roshan
திருகோணமலை(Trincomalee) – மொரவெவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முதலிக்குளம் வித்தியாலயத்திற்கு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கள விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
முதலிக்குளம் கிராமத்தில் 1989ஆம் ஆண்டு வரை நடைபெற்ற முதலிக்குளம் வித்தியாலயம் உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக அங்கிருந்து மக்கள் குடிபெயர்ந்து சென்றமையினால் அப்பாடசலையும் மூடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, 2012ஆம் ஆண்டு மீள ஆரம்பிக்க முயற்சி எடுத்தபோது பிள்ளைகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதனால் ஆரம்பிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
முதலிக்குளம் வித்தியாலயம்
எனினும், தற்பொழுது முதலிக்குளம் கிராமத்தில் அதிகமான மக்கள் மீள குடியேறிய நிலையில் 1989ஆம் ஆண்டு காலத்தில் இருந்த இடத்தில் மீண்டும் முதலிக்குளம் வித்தியாலயத்தினை ஆரம்பித்து தருமாறு கிராம வாசிகள் மற்றும் அப்பபகுதி சங்கங்களினால் 2023ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூபின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
அத்துடன், அப்பகுதி பிள்ளைகளின் எதிர்காலத்தினையும் கருத்தில் கொண்டு “யாவர்க்கும் கல்வி கிடைக்க வேண்டும்” என்ற நோக்குடன் முதலிக்குளம் கிராம பிள்ளைகள் பாடசாலைக்கு சுமார் பல கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் செல்லவேண்டிய நிலையில் உள்ளார்கள் என்பதையும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், திருகோணமலை வடக்கு வலயக்கல்விப் பணிப்பாளருக்கும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், இந்த வருடம் மீள ஆரம்பிக்கப்பட்ட முதலிக்குளம் வித்தியாலயத்தினை நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் நேரடியாக சென்று பார்வையிட்டு பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றார்கள் மற்றும் அப்பகுதி முக்கியஸ்தர்களுடன் அப்பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.