180 பேருடன் பயணித்த இண்டிகோ விமானம், நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை அடுத்து அவசரமாக டில்லியில் தரையிறக்கப்பட்டதால் பயணிகள் பதற்றமடைந்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
டில்லியில் இருந்து லே விமான நிலையத்துக்கு இன்று (ஜூன் 19) காலை 180 பயணிகளுடன் இண்டிகோ விமானம் புறப்பட்டுச் சென்றது.
தரையிறங்க முயன்றபோது தொழில்நுட்பக் கோளாறு
லே விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானம் டில்லிக்கு மீண்டும் திருப்பி விடப்பட்டது.
டில்லி விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். டில்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என இண்டிகோ விமான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பயணிகள் மத்தியில் அச்சம்
அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்துக்கு பின்னர் கடந்த 7 நாள்களில், அதிக விமானங்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கம் செய்யப்படுவது பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
