Home இலங்கை அரசியல் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்ட இடைக்கால கணக்கு வாக்கெடுப்பு

நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்ட இடைக்கால கணக்கு வாக்கெடுப்பு

0

புதிய இணைப்பு

2025ஆம் ஆண்டுக்கான முதல் நான்கு மாதங்களுக்கான அரசாங்கத்தின் இடைக்கால கணக்கு வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் இன்று (06.12.2024) கணக்கு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் பணிகள் மற்றும் கடன் சேவைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கான குறித்த இடைக்கால கணக்கு வாக்கெடுப்பு கடந்த 03ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதற்கான விவாதம், நேற்றையதினமும் இன்றையதினமும் முற்பகல் 9.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை நடைபெற்றதையடுத்து தீர்மானம் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது.

முதலாம் இணைப்பு

2025 ஆம் நிதியாண்டின் முதல் 4 மாதங்களுக்கான அரச செலவினங்கள், மூலதனச்
செலவுகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு, இதர கடன் சேவைக்கான அனுமதியைப் பெறும்
இடைக்காலக் கணக்கறிக்கை நேற்று பிரதமர் ஹரிணி அமரசூரியவால் நாடாளுமன்றத்தில்
சமர்ப்பிக்கப்பட்டது.

இந்தக் கணக்கறிக்கை மீது சபையில் நேற்று ஆரம்பமாகிய
விவாதம் இன்றும் தொடரவுள்ளதுடன் இன்று மாலை இதன் மீது வாக்கெடுப்பு
நடத்தப்படவுள்ளது.

இந்நிலையில், வாக்கெடுப்பின்போது இடைக்காலக் கணக்கறிக்கையை எதிர்ப்பதில்லை
என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களும்
தீர்மானித்துள்ளனர்.

தமிழரசுக் கட்சியின் தீர்மானம்

நேற்று இரவு நிகழ்நிலையில் கூடிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக்
கூட்டத்தின்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஆயினும், பாதுகாப்புத்துறைக்கான செலவினம் உச்சமாக இருந்தால், இடைக்கால
கணக்கறிக்கையை ஆதரிக்காமல் – வாக்கெடுப்பில் பங்குபற்றாமல் ஒதுங்குவது என்றும்
நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2025ஆம் நிதியாண்டின் முதல் 4 மாதங்களுக்கான இடைக்காலக் கணக்கறிக்கையைத்
தயாரிப்பது தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் முன்வைக்கப்பட்ட
யோசனைக்குக் கடந்த நவம்பர் 25ஆம் திகதி அமைச்சரவையில் அங்கீகாரம்
வழங்கப்பட்டது.

2 ஆயிரத்து 600 பில்லியன் ரூபா 2025 ஆம் நிதியாண்டின் முதல் நான்கு
மாதங்களுக்கு இடைக்காலக் கணக்கறிக்கையின் ஊடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இடைக்காலக் கணக்கறிக்கையின் பிரகாரம் முதல் நான்கு மாதங்களுக்கான அரச வருவாய்
1600 பில்லியன் ரூபாவாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

அடிப்படை கடன் வரம்பு
1000 பில்லியன் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் மீண்டெழும் செலவீனங்களுக்கு 1000 பில்லியன் ரூபாவும், வெளிநாட்டுக் கடன்
மறுசீரமைப்பு, வட்டி செலுத்தல் மற்றும் இதர கடன் சேவைகளுக்கு 1175 பில்லியன்
ரூபாவும், மூலதனச் செலவுக்கு 425 பில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.

என்றாலும், கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட பணிகள் இடம்பெற்று வருவதால்
காலதாமதங்கள் ஏற்பட்டால் அடிப்படைக் கடன் பெறும் வரம்பை 4 ஆயிரம் பில்லியன்
ரூபா வரை அதிகரிக்கவும், இந்த மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் இறையாண்மை கடன்
பத்திரங்கைளை வெளியிடவும் அரசு இடைக்காலக் கணக்கறிக்கையில் ஏற்பாடுகளைச்
செய்துள்ளது. 

மேலதிக தகவல் – ராகேஷ்

NO COMMENTS

Exit mobile version