ஐக்கிய மக்கள் சக்திக்குள் உள்ளக முரண்பாடுகள் காணப்படுவதன் அடிப்படையிலேயே அஜித் மன்னப்பெருமவின் (Ajith Mannapperuma) தொகுதி அமைப்பாளர் பதவி நீக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் (Mujibur Rahman) தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமிதா அபேரத்னவின் (Damitha Abeyratne) பெயர் இறுதி நேரத்தில் நீக்கப்பட்டமை நியாயமற்றது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் (SJB) நேற்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அஜித் மன்னப்பெரும விவகாரம்
அவர் மேலும் தெரிவிக்கையில், ”அஜித் மன்னப்பெரும விவகாரம் கட்சியின் உள்ளக பிரச்சினையாகும். அவரது தொகுதி அமைப்பாளர் பதவி எதற்காக பறிக்கப்பட்டது என்பது எனக்குத் தெரியாது.
ஆனால், வேட்புமனு தாக்கலின் பின்னரே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் கட்சி தலைவர் மற்றும் செயலாளரின் நிலைப்பாட்டைக் கோர வேண்டும்.
தமிதா அபேரத்னவுக்கு வேட்புமனு இடமளிக்குமாறு கட்சி தீர்மானித்திருந்த நிலையில், இறுதிக் கட்டத்தில் எதற்காக அந்த தீர்மானம் மாற்றப்பட்டது என்பதும் எனக்கு தெரியாது.
சம்பிக்க ரணவக்கவின் கட்சி
எனினும், இது அநீதியாகும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். எனவே கட்சி இவ்விவகாரம் தொடர்பில் ஆராயும் என்று எதிர்பார்க்கின்றோம்.
சம்பிக்க ரணவக்கவின் (Patali Champika Ranawaka) கட்சியில் வேட்பாளர்களைக் களமிறக்குவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகவே அவர் விலகினார் என்பதே நான் அறிந்த காரணியாகும்.
தயாசிறி ஜயசேகரவின் (Dayasiri Jayasekara) பெயர் குருணாகல் வேட்புமனு பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதும் தெரியாது” என தெரிவித்தார்.