Home உலகம் லெபனான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : 19 பேர் பலி

லெபனான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : 19 பேர் பலி

0

லெபனான் (Lebanon) மீது இஸ்ரேல் (Israel) மீண்டும் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தாக்குதலானது நேற்று (27) இடம்பெற்றுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு ஒக்டோபர் ஏழாம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.

இஸ்ரேல் தாக்குதல் 

இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதுடன் இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா (Gaza) முனைக்கு ஹமாஸ் (Hamas) கடத்தி சென்றது.

இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில் இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதனுடன், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 700 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அதிரடி தாக்குதல்

இதனிடையே, இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா (Hezbollah) பயங்கரவாதிகளும் மற்றும் ஈராக்கில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பினரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

இந்த அமைப்புகள் இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில் இந்த தாக்குதல்களுக்கு இஸ்ரேல் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

குறிப்பாக, லெபனானுக்குள் புகுந்து இஸ்ரேல் இராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் நேற்று (27) மீண்டும் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் 19 பேர் உயிரிழந்துள்ள நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் உள்பட இதுவரை மொத்தம் இரண்டாயிரத்து 672 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும், சுமார் 12 ஆயிரத்து 500 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/israel-strikes-lebanon-19-dead-1730103532

NO COMMENTS

Exit mobile version