இலங்கையில் இஸ்ரேலிய (Israel) மத ஸ்தலங்களையோ அல்லது அதுபோன்ற இடங்களையோ நிர்மாணிப்பதற்கு எந்தவொரு அரசாங்க நிறுவனமும் இதுவரை அனுமதி வழங்கவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.
இன்றைய (08) நாடாளுமன்ற அமர்வின் போது தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் (Mujibur Rahman) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இதுவரை, புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு அல்லது அதன் எந்தவொரு திணைக்களமும் இஸ்ரேலிய பிரஜைகளால் மத ஸ்தலங்களையோ அல்லது அதுபோன்ற இடங்களையோ நிர்மாணிப்பதற்கு அனுமதி வழங்கவில்லை.
வெளியுறவு அமைச்சின் தலையீடு
எனினும், இவ்வாறான நிலையங்கள் பராமரிக்கப்படுவதை நாம் அறிவோம். அவர்கள் பற்றிய தகவல்களைப் பெற்று நிலைமையை அவதானித்துள்ளோம்.
அத்தகைய அனுமதி இதுவரை வழங்கப்படாததால், இந்த நடவடிக்கைகள் அனுமதியின்றி நடைபெறுகின்றன.
அத்துடன், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வெளியுறவு அமைச்சு (Minister of Foreign Affairs) தலையிட்டு வருகின்றது” என அவர் மேலும் தெரிவித்தார்.