Home இலங்கை அரசியல் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் நியமனம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் நியமனம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

0

இலங்கைத் தமிழரசு கட்சியின் புதிய தலைவர் சி.வி.கே.சிவஞானம் (C. V. K. Sivagnanam) எதிர்வரும் வழக்குத் திகதியில் தனது பதிலியை சமர்ப்பிக்க வேண்டும் என இன்று (04) நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் குறித்த வழக்கின் எதிராளியுமான எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்தார். 

தமிழரசுக் கட்சியின் வழக்கானது திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்திருந்தார்.

வழக்கின் இறுதியில் செய்தியாளர்களுக்கு கருத்து வெளியிட்ட சுமந்திரன், ”தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த மாவை சேனாதிராஜாவின் (Mavai Senathirajah) மறைவுக்குப் பின்னர் அவருக்குப் பதிலாக புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ள காரணத்தினால் அவரை இந்த வழக்கிலே முதலாவது எதிராளியாக பதிலீடு செய்துகொள்வதற்கே இன்றையதினம் குறித்த வழக்கு அழைக்கப்பட்டிருந்தது.

நீதிமன்றம் உத்தரவு 

அதற்கான ஆவணங்களை வழக்காளி, மன்றிலே சமர்ப்பித்திருக்கின்றார்.

புதிய தலைவர் சி.வி.கே.சிவஞானத்திற்கு இந்த வழக்கு தொடர்பான அறிவித்தல் கொடுத்து எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி தன்னுடைய பதிலியை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என இன்றைய வழக்கிலே நீதிமன்றால் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை சில நாட்களுக்கு முன்னர் சுப்பிரமணியம் பரமானந்தம் என்பவர் தான் கட்சி உறுப்பினர் எனவும் இந்த வழக்கிலே தன்னை இடைபுகு மனுதாரராக சேர்த்துக் கொள்ளும்படியாகவும் ஒரு விண்ணப்பம் செய்திருக்கின்றார்.

இந்த வழக்கானது சென்ற வருடம் பெப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டு யாராவது வழக்கிலே அக்கறை உள்ளவர்கள் வழக்கிலே இணைந்து கொள்வதானால் 2024 பெப்ரவரி 29ஆம் திகதிக்கு முன்னதாக மன்றுக்கு வர வேண்டும் என்று பத்திரிகைகளிலே அறிவித்தலும் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

எதிர்ப்பை வெளியிட்டோம் 

இந்நிலையில் ஒன்றரை வருடங்கள் கழித்து தன்னை இடைபுகுமனுதாரராக சேர்த்துக் கொள்ளுமாறு சுப்பிரமணியம் பரமானந்தம் என்பவர் விண்ணப்பித்திருக்கின்ற காரணத்தினாலே நாங்கள் பலர் அதற்கு எங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தோம்.

எனினும் சில எதிராளிகளின் சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகள் எந்த எதிர்ப்பும் இல்லை அவர் சேர்த்துக் கொள்ளப்படலாம் என கூறியிருந்தார்கள்.

குறிப்பாக சிறீதரன் (S.Shritharan), குகதாசன் (K. S. Kugathasan)  மற்றும் யோகேஸ்வரன் சார்பிலே முன்னிலையான சட்டத்தரணிகள் இந்த சந்தர்ப்பத்திலேயும் அவரை சேர்த்துக் கொள்வதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என கூறியிருந்தார்கள்.

புதிய தலைவர் பதிலியை அணைக்க வேண்டும்

சுப்பிரமணியம் பரமானந்தம் என்பவர் தன்னுடைய மனுவிலே இந்த வழக்கானது இழுபட்டுக் கொண்டு செல்கின்ற காரணத்தினாலே காலம் போய்க் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேதான் தன்னை இணைத்துக் கொள்ளும்படியாக தன்னுடைய மனுவின் 9ஆம் 10ஆம் பந்திகளிலே சொல்லியிருக்கின்றார்.

ஆகவே அதை மேற்கோள்காட்டி நாங்கள் ஆட்சேபனை தெரிவித்தோம். அவரை சேர்த்துக் கொள்வதா?, இல்லையா? என்ற விசாரணையே ஒரு வருடம் இழுபடும். இது வழக்கை இழுத்தடிப்பதற்கான ஒரு முயற்சி.

எனவே அந்த இடைபுகுநரை மனுவில் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்ற எங்களுடைய ஆட்சேபனைக்காக வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி தவணையிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் சி.வி.கே.சிவஞானமும் தன்னுடைய பதிலியை அணைக்க வேண்டியுள்ளது” என தெரிவித்தார்.

https://www.youtube.com/embed/TrvMzyq1WV8https://www.youtube.com/embed/ugXe_O4AmHw

NO COMMENTS

Exit mobile version