Home இலங்கை அரசியல் தமிழரசுக் கட்சியூடாக பயணிப்பதனால் மக்கள் சார்ந்து பணியாற்ற முடியுமா! சட்டத்தரணி வீ.எஸ்.எஸ். தனஞ்சயன்

தமிழரசுக் கட்சியூடாக பயணிப்பதனால் மக்கள் சார்ந்து பணியாற்ற முடியுமா! சட்டத்தரணி வீ.எஸ்.எஸ். தனஞ்சயன்

0

தமிழரசுக் கட்சியூடாக பயணிப்பதனால் மக்கள் சார்ந்து எதிர்காலத்தில் பணியாற்ற
முடியுமா?என்ற கேள்வியை எனக்குள் எழுப்பியுள்ளது என சட்டத்தரணி
வீ.எஸ்.எஸ். தனஞ்சயன் தெரிவித்துள்ளார்.

அவர் நேற்று(07.10.2024) தனது சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல்

அவர் மேலும் தெரிவிக்கையில், 

“ 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தைப்
பிரதிநிதித்துவப்படுத்தி வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிடுமாறு பல்வேறு
கட்சிகளாலும் சுயேட்சைக்குழுக்களாலும் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அந்த அடிப்படையில் தமிழ் மக்களினுடைய பாரம்பரிய கட்சிகளில் ஒன்றான கட்சி,
இலங்கை தமிழரசுக்கட்சி என்ற அடிப்படையில் தமிழரசுக்கட்சியின் ஊடாக வன்னித்
தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்கு தீர்மானித்திருந்தேன்.

ஆயினும் நான், தமிழரசுக்கட்சியில் போட்டியிடுவது தொடர்பாக என்னுடைய
நண்பர்களுடனும் நலன்விரும்பிகளுடனும் கலந்துரையாடியபோது, பலர் தற்போதைய
சூழ்நிலையில் இலங்கைத் தமிழரசுக்கட்சியில் போட்டியிடவேண்டாம் என ஆலோசனை
வழங்கியிருந்தனர்.

அத்துடன் நான், தமிழரசுக்கட்சியில் போட்டியிடுவதானது
உண்மையான தமிழ்த் தேசியத்தை பலவீனப்படுத்தும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.

நலன்விரும்பிகளின் விமர்சனங்கள்

இருந்த போதிலும், என்னுடைய நலன்விரும்பிகளின் விமர்சனங்களையும் மீறி,
தமிழரசுக் கட்சி ஊடாக போட்டியிடுவது என்று தீர்மானித்திருந்தேன். 

கடந்த காலங்களில் அந்தக் கட்சி எம்மவர்களால் அடையாளப்படுத்தப்பட்டு மக்கள்
மத்தியிலும் சர்வதேச அரங்கிற்கும் கொண்டு செல்லப்பட்ட கட்சியாகும். 

அந்த அடையாளத்தை நாங்கள் பிரதிபலிக்கவேண்டும் என்பதே என்னுடைய நோக்கமாக இருந்தது.

எனினும், கடந்த சில நாட்களாக கட்சி சார்ந்து நடைபெறுகின்ற சங்கடம் தருகின்ற
விடயங்கள் அந்தக் கட்சி ஊடாக பயணிப்பதன் ஊடாக எங்கள் மக்கள் சார்ந்து
எதிர்காலத்தில் பணியாற்ற முடியுமோ? என்ற கேள்வியை எனக்குள் எழுப்பியுள்ளது.

நான் நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாவிட்டாலும், மக்கள் சார்ந்த பணியில் முடிந்த
அளவிற்கு கடந்தகாலங்களில் பணியாற்றியிருக்கிறேன். தொடர்ந்தும் பணியாற்றுவேன்.

என்னுடைய மக்கள் சார்ந்த பணிக்கு உங்கள் ஒத்துழைப்புக்களை தொடர்ந்தும்
வழங்குவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version