சம்பள
நிர்ணய சபையைக்கூட்டி அதற்குரிய யோசனையை அரசாங்கம் முன்வைக்க வேண்டும். அதற்கு
நாம் முழு ஆதரவையும் வழங்குவோம் என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும்,
முன்னாள் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கொட்டகலை சீ.எல்.எப் கேட்போர் கூடத்தில் நேற்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ” பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் சிலர் இன்று கேள்வி
எழுப்புகின்றனர். அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரத்து 350 ரூபாவும், ஊக்குவிப்பு
தொகையாக 350 ரூபாவையும் பெற்று தருவோம் என நாம் உறுதியளித்தோம். அதற்கான
வர்த்தமானியும் வெளியானது.
சம்பள பிரச்சினை
தூரநோக்கு சிந்தனை அடிப்படையில் நாம் கடந்த ஆட்சியின் போது அடிப்படை சம்பளம்
ஆயிரத்து 350 ரூபாவுக்கு இணங்கி இருக்காவிட்டால் இன்று அந்த அதிகரிப்பு கூட
கிடைக்க பெற்றிருக்காது. எஞ்சிய தொகையை பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சிகளை
முன்னெடுப்போம்.
தேசிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கமானது, தோட்டத் தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம்
ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வந்தது. எனவே, சம்பள
நிர்ணய சபையைக்கூட்டி அதற்குரிய யோசனையை அரசாங்கம் முன்வைக்க வேண்டும்.
அதற்கு
நாம் முழு ஆதரவையும் வழங்குவோம்.
அதேவேளை, கண்டி, உன்னஸ்கிரிய பகுதியில் அரச பெருந்தோட்ட யாக்கத்தால் கடிதமொன்று
அனுப்பட்டுள்ளது. 14 நாட்கள் தொடர்ச்சியாக வேலைக்கு வராவிட்டால்
வெளியேற்றப்படுவீர்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, எமக்கான பிரதிநிதித்துவம் இருந்தால்தான் இவ்வாறான சவால்களை எதிர்கொள்ள
வேண்டும். தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்யும் சூழ்ச்சியில் மக்கள்
சிக்கக்கூடாது. எமது பிரதிநிதித்துவத்தை மக்கள் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.