என்னை சிறையில் அடைப்பதன் மூலம் எனது அரசியலை முடக்கி விட முடியாது என முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சிறையில் இருந்து கொண்டு மக்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
2015ஆம் ஆண்டு போலவே இன்றும் அரசியல் ரீதியாக தோற்கடிக்க முடியாத நபர்களுக்கு எதிராக அவதூறுகளை பரப்பி, அரசு அதிகாரத்தை பயன்படுத்தி சிறையில் அடைத்து அவர்களை அரசியல் ரீதியாக கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசியல் பயணம்
குருணாகல் மக்களுக்கும் அவர்களின் அபிவிருத்திக்காகவும் குரல் கொடுத்தது பிழை என காண்பிக்க முயற்சிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தனது பெற்றோரினால் நிர்மாணிக்கப்பட்ட தமது பிறந்த வீட்டை தீக்கிரையாக்கி விட்டதாகவும் இவ்வாறான அழுத்தங்கள் மூலம் தம்மை அமைதிப்படுத்த முடியாது என்ற நிலையில் சிறையை காட்டி தம்மை அமைதிப்படுத்தலாம் என நினைப்பது நகைப்பிற்குரியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குருணாகல் மக்களின் அன்பும் நம்பிக்கையும் தமது அரசியல் பயணத்தில் எப்போதும் உண்டு எனவும் எவராலும் தமது அரசியல் பயணத்தை முடிவுக்கு கொண்டுவர முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச
தாம் நம்பும் அரசியலுக்காக எந்த ஒரு தியாகத்தையும் செய்ய தயார் என அவர் கூறியுள்ளார்.
நாட்டை காப்பாற்றிய மகிந்த ராஜபக்சவிற்கு இருந்த கௌரவமும் அன்பும் அதே அளவில் காணப்படுவதாகவும் பல்வேறு தடைகள் அழுத்தங்களுக்கு மத்தியில் நாமல் ராஜபக்ச தலைமையிலான பொதுஜன முன்னணி கட்சி உறுப்பினர்களை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் ஜொன்ஸ்டன் தெரிவித்துள்ளார்.
மகசீன் சிறைச்சாலையிலிருந்து தாம் இந்த அறிக்கையை வெளியிடுவதாக தனது கட்சி ஆதரவாளர்களுக்கு ஜொன்ஸ்டன் குறிப்பிட்டுள்ளார்.