ஊடகவியலாளர் செல்வக்குமார் நிலாந்தன் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் ஐந்தாம் திகதிக்கு (2025.05.05) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் செங்கலடி பிரதேச செயலாளர் வில்வரெட்ணம் தொடர்பாக ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களில் செய்திகளை பதிவிட்டதாக கூறி கடந்த 2019.02.21ம் திகதி தனது அரச கடமைக்கு இணையத்தளம் ஊடாக குந்தகம் விளைவித்தார், அரச கடமைக்கு தடை ஏற்படுத்தினார் என ஏறாவூர் காவல் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய ஊடகவியலாளர் நிலாந்தன் மீது ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
குறித்த வழக்கு விசாரணையானது கடந்த நான்கு வருடங்களாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாத நிலையில் இன்றைய (20/01/2025) தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருந்த நிலையில் வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் ஐந்தாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கத்திடம் கோரிக்கை
கடந்த காலங்களில் செங்கலடி பிரதேச செயலாளராக இருந்து தற்போது கிழக்கு மாகாண சபையில் நிர்வாக பிரதி செயலாளராக கடமையாற்றி வரும் நல்லையா வில்வரெட்ணம் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள், ஊழல் குற்றச்சாட்டுக்கள், உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்காக பிரதேச செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில் அது குறித்து ஊடகங்களில் செய்திகளை பிரசுரித்த ஊடகவியலாளர் மீது பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஏறாவூர் காவல்துறையினர் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முன்னாள் செங்கலடி பிரதேச செயலாளர் வில்வரெட்ணம் குறித்த இலஞ்ச ஊழல் பாலியல் குற்றச்சாட்டுக்களை விசாரணை நடாத்தாத அரசு அது குறித்த செய்திகளை வெளியிடும் ஊடகவியலாளர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து ஊடகவியலாளர்களின் கடமைக்கு பங்கம் விளைவித்து இலஞ்ச ஊழல் குற்றம் புரியும் அரச அதிகாரிகளை பாதுகாக்கும் வகையில் காவல்துறையினர் செயற்படுவது தொடர்பாக புதிய அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என ஊடக அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊடகவியலாளர் நிலாந்தன் மீதான அடக்கு முறைகள் குறித்து சுயாதீன விசாரணை ஒன்றை நடாத்துவதற்கு புதிய அரசாங்கம் முன்வர வேண்டும் என கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.