பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு (Galagoda Aththe Gnanasara) எதிரான வழக்கு ஒன்றின்
தீர்ப்புக்கு திகதி குறிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த 2016 ஜுலை 26ஆம் திகதி
கொழும்பின் கிருலப்பனையில் அமைந்திருந்த பொதுபல சேனா தலைமையகத்தில் நடைபெற்ற
செய்தியாளர் சந்திப்பில், ஞானசார தேரர் இஸ்லாம் மார்க்கத்தை அவதூறு செய்யும் வகையில்
கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
அந்தக் கருத்தின் மூலம், அவர் மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில்
செயற்பட்டதாக தெரிவித்து குற்றவியல் சட்டம் 291 (அ) பிரிவின் கீழ் அவருக்கு
எதிரான வழக்கொன்றை கொழும்பு குற்றத் தடுப்பு காவல்துறையினர் தாக்கல்
செய்திருந்தனர்.
வழக்கு விசாரணை
குறித்த வழக்கின் விசாரணை நேற்றைய தினம் (26) கொழும்பு
மேலதிக நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்
கொள்ளப்பட்டது.
இந்த விசாரணையின் போது ஞானசார தேரரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகி
இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி காமினி அல்விஸ், தனது
கட்சிக்காரருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் போதிய சாட்சியங்களை
முறைப்பாட்டாளர் தரப்பு முன்வைக்கத் தவறியுள்ளதாக வாதிட்டமை குறிப்பிடத்தக்கது.