Home இலங்கை அரசியல் இனப்படுகொலையை நியாயப்படுத்துவதற்காக செயற்பட்ட ஜே.வி.பி : கஜேந்திரகுமார் பகிரங்கம்

இனப்படுகொலையை நியாயப்படுத்துவதற்காக செயற்பட்ட ஜே.வி.பி : கஜேந்திரகுமார் பகிரங்கம்

0

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையை நியாயப்படுத்துவதற்கு ஜே.வி.பி (JVP) முன்னின்று செயற்பட்டதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.

அத்துடன் போருக்கு பின்னரான காலப்பகுதியில் வடகிழக்கில் முன்னெடுக்கப்படுகின்ற எந்தவொரு போராட்டத்திற்கும் ஜேவிபி ஆதரவு வழங்கவில்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழினத்தை நம்ப வைத்தல் 

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி இலங்கையின் அமைச்சரவை கூடி முக்கியமான தீர்மானம் ஒன்றை எடுத்திருந்தது.

ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது அமர்வுகள் தொடர்பாகவும் 51 தீர்மானத்தின் ஆயுட்காலம் முடிவுக்கு வருகின்ற நிலையில் அந்த தீர்மானத்தை நீடிப்பதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படவிருந்த நிலையில் இலங்கையின் அமைச்சரவை தீர்மானமொன்றை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இனவாதத்தை ஒழித்து சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கு நேர்மையாக முயற்சிப்பதாக தமிழினத்தை நம்ப வைப்பதற்கு முயற்சிக்கின்ற இந்த அரசாங்கத்தின் உண்மை முகம் அம்பலமாகியுள்ளது.

ராஜபக்ச தரப்பு 

ஜே.வி.பி எந்த வகையில் தமிழினத்திற்காக செயற்பட்டது என்பது குறித்து சிந்திக்க வேண்டும்.

சுனாமியின் போது அதிகமாக பாதிக்கப்பட்ட வடகிழக்கு மக்களுக்காக வந்த உதவிகளை தடுத்து நிறுத்தியதுடன் வடகிழக்கை நிரந்தரமாக பிரிப்பதற்கு முழுமையாக செயற்பட்டது ஜே.வி.பி தான். 

ராஜபக்ச தரப்பு இனவாதத்தை கக்கிக்கொண்டிருந்தது ஆனால் இனப்படுகொலையை சிங்கள மக்கள் மத்தியில் தத்துவ ரீதியாக நியாயப்படுத்துவதற்கு முழுமையான பலம் சேர்த்துக்கொடுப்பதற்கு ஜே.வி.பியும் ஜாதிக எல உறுமயவும் (Jathika Hela Urumaya) தான் முன்னின்று செயற்பட்டன.“ என தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version