Home இலங்கை அரசியல் கல்கமுவ நெல் களஞ்சியத் தொகுதியை மீண்டும் செயற்படுத்த நடவடிக்கை

கல்கமுவ நெல் களஞ்சியத் தொகுதியை மீண்டும் செயற்படுத்த நடவடிக்கை

0

குருநாகல்(Kurunegala) மாவட்டத்தின் , கல்கமுவையில் அமைந்துள்ள அரசாங்கத்தின் பாரிய நெல் களஞ்சியத் தொகுதிக்கு வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க(Wasantha Samarasinghe) விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

சனிக்கிழமை(28) இடம்பெற்ற இந்த விஜயத்தின் போது அமைச்சருடன், பொறியியல் மற்றும் கட்டுமானத்துறை சார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நெல் களஞ்சியசாலை

இந்த விஜயத்தின் போது கல்கமுவ நெல் களஞ்சியத் தொகுதியை மீண்டும் பாவனைக்கு பயன்படுத்திக் கொள்வதற்கான புனரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் சாத்தியப்பாடு குறித்து அமைச்சர் சமரசிங்க, அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்டார்.

கடந்த 1977ஆம் ஆண்டு தொடக்கம் இந்த நெல் களஞ்சியசாலை பயன்பாட்டில் இல்லாத நிலையில், அதனைச் சுற்றி உள்ள பிரதேசம் புதர்க்காடுகள் மண்டிக் காணப்படுகின்றன.  இந்த நெல் களஞ்சியசாலையில் 40 ஆயிரம் மெட்ரிக் தொன் நெல்லைக் களஞ்சியப்படுத்தும் வகையில் சிலிண்டர் வடிவிலான 22 களஞ்சியத் தொகுதிகள் காணப்படுகின்றன.

அத்துடன் நெல் உலர வைத்தல் உள்ளிட்ட ஏனைய வசதிகளும், அதற்குத் தேவையான நிலப்பரப்பும் இங்குள்ளது.

நெல்லை உலர்தன்மையில் வைத்திருப்பதற்குத் தேவையான இயந்திர சாதனங்களும் இங்குள்ள நிலையில், நீண்ட காலமாகப் பயன்படுத்தாத நிலையில் இந்தக் களஞ்சியத் தொகுதி துருப்பிடித்து, தூர்ந்து போய் பற்றைக்காடாக மாறத் தொடங்கியுள்ளது.

 மீண்டும் அரிசித் தட்டுப்பாடு

இந்நிலையில் குறித்த நெல் களஞ்சியத் தொகுதியை மீண்டும் பாவனைக்கு கொண்டுவருவது தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் சமரசிங்க, இந்த விஜயத்தின் ​போது நீண்ட கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட்டிருந்தார்.

நாட்டில் மீண்டும் அரிசித் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் அரசாங்கத்தின் நெல் களஞ்சியசாலைகளை மீண்டும் பாவனைக்குக் கொண்டுவரும் செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விஜயம் இடம்பெற்றதாக அமைச்சர் சமரசிங்க இதன் போது தெரிவித்தார்.

அத்துடன் கல்கமுவை நெல் களஞ்சியத் தொகுதியை மிக விரைவில் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கான சகல நடவடிக்கைகளும் துரித கதியில் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் சமரசிங்க இதன் போது உறுதியளித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version