முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் 2 வங்கி கணக்குகள் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
சுமார் 20 மில்லியன் பணத்துடன் நடப்புக் கணக்கு மற்றும் நிலையான வைப்பு கணக்குகளே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணைகள் தொடர்பாக இரண்டு கணக்குகளும் ஏழு நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
வங்கி கணக்குகள் முடக்கம்
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் தகவல்களின் பின்னர் இந்த இடைநிறுத்தம் நீடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆணைகுழு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர், ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் ஏனைய உறவினர்களுக்கு சொந்தமான பல சொத்துக்கள் தொடர் விசாரணைகளின் ஒரு பகுதியாக முடக்கப்பட்டன.
நீதிமன்றம் உத்தரவு
கடந்த ஜூலை மாதம் 5ஆம் திகதியன்று, தனியார் வங்கியொன்றில் வைத்திருந்த 97.125 மில்லியன் ரூபாய் பெறுமதியான நிலையான வைப்புத்தொகை மற்றும் காப்புறுதிக் கொள்கைகளை மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
அவை கெஹலிய ரம்புக்வெல்லவின் மனைவி, மூன்று மகள்கள் மற்றும் ஒரு மருமகனுக்கு சொந்தமான ஆயுள் காப்புறுதிகளாகும்.
இந்த உத்தரவு அடுத்த வருடம் ஜனவரி மாதம் 4ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.