“எல் போட்டுகளை நாடாளுமன்றம் அனுப்ப வேண்டாம் எனவும், அனுபவம்மிக்கவர்களை அனுப்புமாறும் பொதுத்தேர்தலின்போது கோரினேன். எனினும், அனுபவம் அற்றவர்கள் வந்தனர். இன்று வாகனத்தையும் விபத்துக்குள்ளாக்கியுள்ளனர்.” என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) தெரிவித்துள்ளார்.
“கிராமத்திற்கான திட்டம் – யானைக்கான அதிகாரம்” என்ற கருப்பொருளில் சிறிகொத்த தலைமையகத்தில் நேற்று(21) நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் வேட்பாளர்களுடன் நடைபெற்ற உரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய மக்கள் சக்தியால் பெரும்பான்மை பலத்தை பெறமுடியாது
உள்ளூராட்சிசபைகளில் அதிகளவான உறுப்பினர்களைக் கொண்ட அணிதான் சபைக்குரிய தலைவரை தெரிவுசெய்ய வேண்டும்.
நடைபெறவுள்ள தேர்தலில் தேசிய மக்கள் சக்தியால் பெரும்பான்மை பலத்தை பெறமுடியாது. எனவே, எதிரணிகள் தற்போது மோதிக்கொள்ளாமல் உறுப்பினர்களை பெறுவதற்கு முற்பட வேண்டும். அப்போது இணைந்து ஆட்சியைக் கைப்பற்றிவிடலாம்.
வீராப்பு பேசினாலும் தேசிய மக்கள் சக்தியால் குட்டி சபைகளைக் கைப்பற்ற முடியாது என்பது உறுதி.
இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளேன்
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தொடர்பில் தான் அளித்த வாக்குமூலம் தொடர்பாக, எதிர்காலத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளேன்.
எனது வழக்கறிஞர் தற்போது வெளிநாட்டில் இருப்பதாகவும், நாடு திரும்பியதும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிடம் திகதி கோருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.
இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் அழைப்பாணையை தான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார்.
