திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட வெல்வேரி
கிராமத்தினை சேர்ந்த பொதுமக்கள் காணி விவகாரம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவிட்டுள்ளனர்.
குறித்த முறைப்பாடு நேற்று (30) மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை
பிராந்திய காரியாலயத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவில் முறைப்பாடு
வெல்வேரி கிராம பகுதியில் வசித்துவந்த 31 குடும்பத்தினர்களது 42 ஏக்கர்
குடியிருப்புக் காணிகள் இன்னும் விடுவிக்கப்படாது காணப்படுகின்றது.
இந்த நிலையில் அந்த காணிகளில் 35
ஏக்கர் காணிப்பகுதியானது பெரும்பான்மையினத்தினை சேர்ந்த தனி நபர் ஒருவருக்கு
அரசினால் குத்தகை அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்தே பாதிக்கப்பட மக்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவிட்டுள்ளனர்.
அத்துடன், உள்நாட்டு யுத்தம் காரணமாக குறித்த கிராமத்தவர்கள் இடம்பெயர்ந்திருந்த
நிலையில் அவர்கள் மீளக் குடியேற முற்பட்டபோது அவர்களது காணிப்பகுதிகளை அரசானது
கையகப்படுத்தியதோடு யுத்தம் முடிந்து பல வருடங்கள் கழிந்த நிலையில் அந்த
காணிகளில் இன்று வரை மீளக்குடியேற முடியாத நிலையில் காணப்படுவதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1983ஆம் ஆண்டு கலவரம்
1983ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தின் போது தாம் இடம்பெயர்ந்து மீளக்
குடியமர்ந்ததன் பின்னர் 1990ஆம் ஆண்டுகளிலும் இடம் பெயர நேரிட்டதாகவும் அதன் பின்னராக
அவர்களது வீடுகள் இருந்த பகுதிகளில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்ததால்
அப்போது மீளவும் குடியேற முடியாத நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, வனஜீவராசிகள் திணைக்களம் அந்த பகுதியில் எல்லையிட்டதன்
பின்னராக தற்போது அங்கு செல்ல முடியாத நிலை காணப்படுவதுடன் அவ்வாறு
எல்லையிடப்பட்ட பகுதிகள் அரச இயந்திரங்கள் மூலமாக பெரும்பான்மையினத்தினை
சேர்ந்த தனி நபர் ஒருவருக்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்க்கடுவதற்கான
ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மேலும், இந்த விடயம் தொடர்பில் பல தரப்பட்ட மட்டங்களில் முறையிடப்பட்டிந்த போதிலும்
தகுந்த பதில் கிடைக்கப்பெறாத நிலையில் மனித உரிமை
ஆணைக்குழுவிடம் முறையிட்டுள்ளதாக அவர்கள்
குறிப்பிட்டுள்ளனர்.