தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் எஸ். லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் இணைந்து நடித்து இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் ‘லப்பர் பந்து’. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம், எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.
கதைக்களம்
கிரிக்கெட் விளையாட்டில் பேட்டிங் ஆடுவதில் சிறந்த ஆட்டக்காரராக இருக்கிறார் கெத்து என்கிற பூமாலை (அட்டகத்தி தினேஷ்). இவர் அடிக்கும் ஒவ்வொரு பந்தும் சிக்கர் தான். இவர் ஆடும் டீம் தான் கோப்பையை தட்டி செல்லும். ஆனால், இவர் கிரிக்கெட் விளையாடுவது அவருடைய மனைவிக்கு பிடிக்கவில்லை.
தினேஷ் பேட்டிங்கில் சேவாக் என்றால், அன்பு (ஹரிஷ் கல்யாண்) பந்து வீச்சில் பட்டையை கிளப்புகிறார். இவர் பந்து வீசினால் பேட்டிங் ஆடும் அனைவரும் தடுமாறுகிறார்கள். தினேஷின் ஆட்டத்தை புரிந்துகொண்ட ஹரிஷ் கல்யாண், அவரை எப்படியாவது விக்கெட் எடுக்க வேண்டும் என வெறியுடன் இருக்கிறார்.
அதே சமயத்தில் தான் காதலிக்கும் பெண் அட்டகத்தி தினேஷின் மகள் என தெரியாமல் காதலித்து வருகிறார் ஹரிஷ். ஒரு கட்டத்தில் தினேஷ் – ஹரிஷ் கல்யாண் இருவரும் கிரிக்கெட் போட்டியில் மோதிக்கொள்ளும் சூழல் ஏற்படுகிறது. அதில் ஹரிஷ் கல்யாண் வீசிய முதல் ஓவரில் தனது விக்கெட்டை இழக்கிறார் தினேஷ்.
இதனால் தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் இருவருக்கும் இடையே கடும் ஈகோ போட்டி ஏற்படுகிறது. இந்த நிலையில் அடுத்து என்ன நடந்தது? இதனால் இருவரின் வாழ்க்கையில் நடந்த விஷயங்களும், பிரச்சனைகளும் என்னென்ன என்பதே படத்தின் மீதி கதை.
அதிகாரப்பூர்வமாக வெளிவந்தது விஜய் கட்சி முதல் மாநாடு… எப்போது எங்கே தெரியுமா?
படத்தை பற்றிய அலசல்
ஹரிஷ் கல்யாண் தனது துடிப்பான நடிப்பில் அனைவரையும் கவர்கிறார். காதல் காட்சிகளிலும் சரி, மைதானத்தில் விளையாடும் காட்சிகளிலும் சரி கச்சிதமாக கதாபாத்திரத்திற்கு பொருந்தி போய் இருக்கிறார்.
அட்டகத்தி தினேஷ் மாஸ் கம் பேக் இதுதான். ஈகோவில் இருக்கும் ஒருவரின் மனநிலை எப்படி இருக்கும், அவர் எப்படி நடந்துகொள்வார் என்பதையும், மனைவியிடம் உடைந்து அழும் இடத்திலும் அசத்திவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் அட்டகத்தி தினேஷ் என்ட்ரி கொடுக்கும் போது ஒலிக்கும் கேப்டன் விஜயகாந்தின் பாடல்கள் வேற லெவல்.
அதே போல் நடிகை ஸ்வாசிகா குடும்பத்தை பார்த்துக் கொள்ளும் பெண்ணாகவும், துணிச்சலான நடிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார். சஞ்சனா, பால சரவணன், டி எஸ் கே, ஜென்சன், தேவதர்ஷினி, காலி வெங்கட் என அனைவருக்கும் சமமான ஸ்கோப் கொடுத்துள்ளார் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து.
திரைக்கதையில் எங்கும் தொய்வு இல்லாமல் உருவாக்கிய விதம், கிரிக்கெட் விளையாட்டில் இருக்கும் அரசியல் குறித்து பேசியது, கிரிக்கெட் விளையாட்டு காட்சிகளை அமைத்த விதம் என படத்தை அருமையாக இயக்கியுள்ளார் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து.
படத்தில் குறை என்று சொல்லும் அளவுக்கு எதுவும் இல்லை. வலுவான திரைக்கதையால் எங்குமே நமக்கு சலிப்பு தட்டவில்லை. அதுவே இப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.
கதைக்கு ஏற்றாற்போல் அமைந்த இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் பாடல்களும், பின்னணி இசையும் அருமையாக இருந்தது. மனதிலும் பதிந்தது.
நகைச்சுவைக்கும், எமோஷனுக்கும் படத்தில் பஞ்சமில்லை. குறிப்பாக கிரிக்கெட் விரும்பிகளுக்கு இப்படம் நல்ல விருந்து தான். அதே போல விஜயகாந்த் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்யும் வகையில் அமைந்த மாஸ் காட்சிகளும் திரையரங்கில் வேற லெவலில் இருந்தது.
பிளஸ் பாயிண்ட்
நடிகர், நடிகைகளின் நடிப்பு
கிரிக்கெட் காட்சிகள், எமோஷனல் காட்சிகள்
திரைக்கதை
கிளைமாக்ஸ் காட்சி
விஜயகாந்த் ரெஃபரென்ஸ்
மைனஸ் பாயிண்ட்
பெரிதாக ஒன்றும் இல்லை