Home இலங்கை அரசியல் நிம்மதியான வழிபாட்டு இடமாக வெடுக்குநாறி மலையை ஏற்படுத்திக் கொடுங்கள் : ரவிகரன் வலியுறுத்து

நிம்மதியான வழிபாட்டு இடமாக வெடுக்குநாறி மலையை ஏற்படுத்திக் கொடுங்கள் : ரவிகரன் வலியுறுத்து

0

வவுனியா (Vavuniya) வடக்கு – ஒலுமடு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் தமிழ் மக்கள்
நிம்மதியான முறையில் வழிபடுவதற்கான வழி வகைகளை ஏற்படுத்துமாறு வன்னி மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று
(27) இடம்பெற்ற போது அதில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு
குறிப்பிட்டுள்ளார்.

குடிநீர் இன்றி மிகுந்த இடர்பாடுகள்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வெடுக்குநாறி மலையில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்கோ, பொதுமக்கள் சென்று வருவதற்கோ
எவ்வித தடையுமில்லை என்ற நீதிமன்றத் தீர்ப்பிற்கு அமைவாக அங்கு மக்கள் சென்று
வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு அங்கு மக்கள் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்ற போதும், இந்த
ஆலயத்திற்குச் செல்வதற்கான பிரதான வீதி மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில்
மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த கால ஆட்சியாளர்கள் அவ்வீதியை
சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.

தற்போது புதிதாகப் பொறுப்பேற்றுள்ள
அரசாங்கமானது அவ்வீதியை சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்தோடு, குறித்த ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று வழிபாடுகளுக்காகச்
சென்ற அடியவர்கள் குடிநீர் இன்றி மிகுந்த இடர்பாடுகளுக்கு முகங்
கொடுத்திருந்தனர்.

இந்திலையில் தண்ணீர் தாகத்தால் தவித்த அடியவர்களுக்கு நீர்
எடுத்துச் செல்லப்பட்ட போது பொலிஸாரால் குடிநீர், கோவில் வளாகத்திற்குள்
எடுத்துச் செல்ல முடியாது எனவும் தடுக்கப்பட்டது.

வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாடு

இந்நிலையில், காலையில் கோவிலுக்கு வழிபாடுகளுக்குச் சென்ற மக்களோடு நானும்
சென்றிருந்தேன்.

மாலை வரை தாகத்தால் தவித்து, குடிநீர் வராததால்
கோவில் வளாகத்தில் இருந்த நீரோடையில் நீரை எடுத்து அருந்த வேண்டிய நிலையும்
ஏற்பட்டிருந்தது.

வெடுக்குநாறி மலை அமைந்துள்ள பகுதி தற்போது வனவளத்
திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது.

எனவே ஆலய
வளாகம் வனவளத் திணைக்களத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்.

குறித்த ஆலயம் பதிவு செய்வதற்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதாகச்
சொல்லப்படுகின்றது.

ஆகவே இந்த ஆலயத்தை பதிவு செய்வதற்கு இடையூறாக இருக்கின்ற
விடயங்களைக் களைந்து, கூடிய விரைவில் பதிவு செய்வதற்கான நடடிக்கை
எடுக்கப்படவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version