மன்னார் (Mannar) நீதிமன்றத்திற்கு முன்னால் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு மன்னார் காவல்துறையினர் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து அவர் நேற்று (16) விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ”மன்னார் நீதிமன்றத்திற்கு முன் நடைபெற்ற துப்பாக்கி பிரயோகம் உண்மையிலேயே கண்டிக்கத்தக்கதும் காட்டு மிராண்டித்தனமானதும் ஒரு விடயமாகும். இந்த மிலேச்சத்தனமான செயலுக்கு மன்னாரில் உள்ள காவல்துறையினர் முழுப்பொறுப்பையும் எடுக்க வேண்டும்.
துப்பாக்கி பிரயோகம்
நொச்சிக்குளம் மக்கள் தொடர்ந்து பழிவாங்கப்படுகிறார்கள். இன்றும் தொடர்ச்சியாக அந்த நொச்சிகுளம் கிராமத்தின் மக்கள் படிப்படியாக படுகொலை செய்யப்படுகின்ற சூழல் காணப்படுகிறது.
இந்த விடயத்தை கடந்த அரசாங்கத்தில் மக்கள் பாதுகாப்பு தொடர்பாடல் அமைச்சரோடு நான் நேரடியாக பேசியிருந்தேன். காரணம் துப்பாக்கி பாவிக்கப்பட்டுள்ளது.
முன்னர் ஏ.கே 47 பாவிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது எந்த வகையான துப்பாக்கி பாவிக்கப்பட்டுள்ளது என்பது தெரியப்படவில்லை. இந்த துப்பாக்கி பிரயோகம் நொச்சிகுளம் மக்களை பார்த்து தான் பிரயோகிக்கப்படுகிறது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.
மன்னார் காவல்துறையினருடைய மெத்தனப் போக்கும் இதில் அடங்கியிருக்கிறது. அந்த கிராமத்து மக்கள் அச்சத்தோடு வாழும் சூழலிலே மீண்டும் மன்னார் நீதி மன்றத்திற்கு முன் இந்த படுகொலைகள் நடைபெற்றிருக்கிறது.
ஜனாதிபதியின் கவனத்திற்கு
ஆகவே இது கண்டிக்கத்தக்கது.
இவ் விடயம் சம்பந்தமாக ஜனாதிபதியின் கவனத்திற்கும், நாடாளுமன்ற கவனத்திற்கும் முக்கியமான விடயமாக கொண்டு வரவுள்ளேன்.
ஏனென்றால் இது தொடர்ச்சியாக நடைபெறுகிற விடயமாக இருக்கிறது.
போன உயிர்களை மீளப் பெற முடியாது. துப்பாக்கி பிரயோகத்தால் உயிர் நீத்த குடும்பங்கள் பல அந்த கிராம மக்கள் அச்சத்தோடு வாழுகின்ற நிலைமை தொடர்கின்றது.
ஆகவே இதன் முழுப்பொறுப்பையும் காவல்துறையினர் எடுக்க வேண்டும். இந்த சம்பவத்திற்கு காரணம் காவல்துறையினருடைய கவனயீனம் அசமந்தப்போக்கு என்பதை இங்கு நான் குறிப்பிட விரும்புகிறேன்.
முப்படைகள் அங்கே பாதுகாப்பு நடவடிக்கையில் இருக்கும் நிலையில் போன்று காட்டிக்கொண்டு இவ்வாறான விடயங்கள் நடைபெறுவது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தல்
அந்த வகையில் இவ்வாறான சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டிய விடயங்களாகும்.
சம்மந்தப்பட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்ட வேண்டும். இதற்கான குழு அடங்கிய புலனாய்வு துறை நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பித்து செயலில் இறங்க வேண்டும்.
மன்னாரில் உள்ள காவல்துறையினரை மட்டும் வைத்து இதற்குரிய நடவடிக்கைகளை செய்து கொள்வது முடியாத காரியமாகும். எனவே கொழும்பில் இருந்து விசேட குழு வரவழைக்கப்பட வேண்டும்.
ஆகவே இந்த சம்பவத்தில் உயிர்நீத்தவர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துவதுடன் காவல்துறையினர் அதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டுவதுடன் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதே எனது கோரிக்கை” என அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.