முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய (Gotabaya Rajapaksa )காலத்தில் ஜனாதிபதி ஊடகப் பிரிவில் பாரிய முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தனுஷ்க ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடகக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த காலங்களில் ஜனாதிபதி ஊடகப்பிரிவின் உபகரணங்கள் பெருந்தொகையில் காணாமல் போயுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
ஆனால் கடந்த 2022ம் ஆண்டின் ஜூலை மாதம் 25ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகமாக நான் பொறுப்பேற்ற போதே குறித்த பொருட்கள் காணாமல் போயிருந்தன.
உள்ளக கணக்கெடுப்பு
அது தொடர்பில் நாங்கள் உள்ளக கணக்கெடுப்பு மற்றும் கணக்காய்வு ஒன்றையும் மேற்கொண்டு, உபகரணங்களையும் தனித்தனியாக பரிசோதித்து, ஜனாதிபதி செயலாளருக்கும் அறிவித்துள்ளோம்.
அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது.
எனவே ரணில் விக்ரமசிங்கவின் காலத்தில் ஜனாதிபதி ஊடகப் பிரிவில் ஏதேனும் உபகரணங்கள் காணாமல் போயுள்ளதாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுமாயின், அதில் எதுவித அடிப்படை உண்மையும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் தனுஷ்க ராமநாயக்க தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.