தமிழ்த் தேசத்தின் குரலாகவும், தமிழ் மக்களின் குரலாகவும் நீண்ட காலம்
பயணித்த மாமனிதரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவருமான மாவை.
சோமசுந்தரம் சேனாதிராஜாவின் இறுதிக்கிரியை நிகழ்வுகள் இன்று நடைபெறவுள்ளன.
இதில் அனைவரையும் பங்கெடுக்குமாறு அன்புடனும் உரிமையுடனும்
கேட்டுக்கொள்கின்றோம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம்
சிறீதரன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
கடந்த புதன்கிழமை காலமான தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள்
நாடாளுமன்ற உறுப்பினருமான தமிழ்த் தேசத்தின் குரல் – தமிழ் மக்களின் குரல் –
மாமனிதர் – மாவை சேனாதிராஜாவின் புகழுடல் யாழ்ப்பாணம் – மாவிட்டபுரத்தில்
அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
எம் தேசத்தின் குரலின் புகழுடலுக்குப் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மற்றும்
அதன் பிரதிநிதிகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கிரியை நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
அதன்படி இன்று காலை 8 மணிக்கு மாவிட்டபுரத்தில் உள்ள அன்னாரின் இல்லத்தில்
சமயக்கிரியைகள் நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து முற்பகல் 10 மணிக்கு அஞ்சலி
உரைகள் அவரது இல்லத்தில் ஆரம்பமாகும்.
அஞ்சலி உரைகள் நிறைவுற்ற பின்னர் மாவிட்டபுரம் தச்சன்காடு இந்து
மயானத்துக்குப் புகழுடல் எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.
இந்த இறுதி நிகழ்வுகளில் அனைவரையும் பங்கெடுக்குமாறு அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்துள்ளார்.
