Home இலங்கை அரசியல் மன்னார் மாவட்ட தேர்தல் கள நிலவரம் தொடர்பாக அரசாங்க அதிபர் ஊடக சந்திப்பு

மன்னார் மாவட்ட தேர்தல் கள நிலவரம் தொடர்பாக அரசாங்க அதிபர் ஊடக சந்திப்பு

0

Courtesy: Kanagasooriyan Kavitharan

மன்னார் மாவட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலில் 90 ஆயிரத்து 607 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதாகவும் தேர்தல் குறித்து 20 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டிருப்பாதாகவும் மன்னார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் கனக சபாபதி கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் நேற்று(16.09.2024) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

ஜனாதிபதித் தேர்தல்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது வன்னி தேர்தல் தொகுதி மன்னார் மாவட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகளுக்கான சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

மன்னார் மாவட்டத்தில் 90 ஆயிரத்து 607 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்பதுடன் 98 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறவுள்ளன.

எமது நிர்வாக தேவை கருதி குறித்த 98 வாக்களிப்பு நிலையங்களும் 25 வலயங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு வலயமும் உதவி தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் ஊடாக குறித்த 98 வாக்களிப்பு நிலையங்களும் மேற்பார்வையின் கீழ் செயல்படும்.

மாவட்ட வாக்கு எண்ணும் நிலையமாக மன்னார் மாவட்டச் செயலகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அதற்குள் 7 வாக்கு எண்ணும் நிலையங்கள் ஸ்தாபிக்கப்படும்.

அதனூடாக மாவட்டத்தின் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். மன்னார் மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்பை பொறுத்தமட்டில் மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற 10 ஆயிரத்து 36 உத்தியோகத்தர்களின் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்று வாக்களிப்பு இடம்பெற்றது.

இதில் 9 ஆயிரத்து 945 உத்தியோகத்தர்கள் தபால் மூல வாக்களிப்பை மேற்கொண்டுள்ளனர். 91 பேர் வாக்களிக்கவில்லை.குறித்த விண்ணப்பங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

ஜனாதிபதித் தேர்தல் குறித்து அனைத்து பயிற்சி வகுப்புக்களும் இடம்பெற்றுள்ளது. 

மன்னார் மாவட்டத்தை பொறுத்த வரையில் தேர்தல் குறித்து 20 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.

குறித்து முறைப்பாடுகள் அனைத்தும் வன்முறையுடன் தொடர்பு பட்டதாக இல்லை. சட்ட ம.மீறலுடன் தொடர்பு பட்ட சாதாரண முறைப்பாடுகளாகவே அவை கிடைக்கப்பெற்றது.
அதற்கான தீர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதித் தேர்தலை சிறப்பான முறையில் நடத்துவதற்கு பொது மக்களை தெளிவு படுத்தும் வகையில் ஒலி பெருக்கி மூலம் கிராமங்கள் தோறும் தெளிவு படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் வாக்களிக்க தேர்தல் திணைக்களத்தினால் அனுமதிக்கப்பட்ட அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு விசேட தற்காலிக அடையாள அட்டை வழங்குவதற்கான பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வாக்களிக்க உள்ள விசேட தேவையுடையவர்களுக்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்களிலும் 2 உதவியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

கண் தெரியாதவர்கள் வாக்களிப்பதில் கடினம் என்பதால் உதவியாளர் ஒருவரை அழைத்துச் சென்று வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

வாக்குச்சீட்டின் நீளம் (2- 1/2) இரண்டரை அடி நீளமாக காணப்படுகின்றமையினால் பொது மக்கள் இலகுவாக தமது வேட்பாளரை தெரிவு செய்வதில் தாமதம் ஏற்படலாம்.இதனை கருத்தில் கொண்டு புள்ளி இடும் சிற்றறைகளின் எண்ணிக்கையை வாக்களிப்பு நிலையங்களில் அதிகரித்துள்ளோம்.

மேலும், மன்னார் மாவட்டத்தில் 127 பிரசார நிலையங்கள் அனுமதியுடன் இயங்கி வருகின்றன. 

மாவட்டத்திற்கு இரண்டு பிரதான அலுவலகங்கள் மாவட்ட அலுவலகங்களாக இயங்கி வருகிறது. 

அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பான முறையில் இடம்பெற்று வருகிறது.

இதேவேளை, தேர்தல் குறித்து முறைப்பாடுகள் கிடைக்கும் பட்சத்தில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் முறைப்பாட்டு பிரிவு இலக்கமான 023-2222215 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version