வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் சர்வதேச தொழிலாளர்
அமைப்பின் (ஐ.எல்.ஓ.) பிரதம தொழில்நுட்ப ஆலோசகர் தோமஸ் கிரிங்கிற்கும்
இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று காலை (04.12.2024) இடம்பெற்றுள்ளது.
வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி
இதன்போது கடந்த காலத்தில் வடக்கு மாகாணத்தில் ஐ.எல்.ஓ. அமைப்பால் முன்னெடுக்கப்பட்ட
திட்டங்கள் தொடர்பில் ஆளுநருக்கு எடுத்துரைக்கப்பட்டதுடன் குறித்த திட்டங்கள் அடுத்த ஆண்டுடன் முடிவுக்கு வரவுள்ளதாகவும் ஆலோசகர் தோமஸ் கிரிங்கால் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்தத் திட்டங்களை முன்னெடுத்துச்
செல்வதற்கு வடக்கு மாகாண சபையால் வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்களுக்கும்,
ஆளுநருக்கும் ஆலோசகர் நன்றி கூறினார்.
மாவட்டச் செயலராக கடந்த காலங்களில் தான் பணியாற்றியபோது முன்னெடுக்கப்பட்ட
திட்டங்களைப்பற்றி நன்கு அறிவேன் எனக் குறிப்பிட்ட ஆளுநர், மக்கள் அவற்றால்
பயனடைந்தனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய
அரசாங்கம் ஏற்றுமதிப் பொருளாதாரத்திலேயே ஆர்வமாக இருப்பதை சுட்டிக்காட்டிய ஆளுநர் இந்த காலகட்டமே வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு மிகப்பொருத்தமான சந்தர்ப்பம் என்பதையும் குறிப்பிட்டுள்ளதோடு அதற்கு உதவுமாறும்
கோரிக்கையை முன்வைத்துள்ளார்.