மத்திய கிழக்கில் மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில் உலக எரிபொருள் விநியோகம் தடைப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, பிரெண்ட் மசகு எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 74.40 டொலராக உயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எரிபொருள் வர்த்தகம்
உலகில் எரிபொருள் உற்பத்தியில் ஈரான் 7வது இடத்தில் உள்ளதுடன் ஒபெக்கில் (OPEC) மூன்றாவது பெரிய எண்ணெய் உற்பத்தியாளராக உள்ளது.
மோதல் மேலும் தீவிரமடைந்தால், ஹோர்முஸ் (Hormuz) கடல் வழியாக எரிபொருள் தாங்கிகளின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படக்கூடும் என சந்தை வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையிலான இந்த கடல் பாதை உலக எரிபொருள் வர்த்தகத்தில் பெரும் பங்களிப்பை அளிக்கின்ற நிலையில் உலகின் எரிபொருள் விநியோகத்தில் சுமார் 20% இதன் மூலம் கொண்டு செல்லப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு
ஏனைய ஒபெக் (OPEC) உறுப்பு நாடுகளான சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் மற்றும் ஈராக் ஆகியவையும் இந்த கடல் வழியை தங்கள் எரிபொருள் போக்குவரத்துக்காக பயன்படுத்துகின்றன.
இதேவேளை இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியம் இல்லை என்று இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தின் தலைவர் டீ.ஜே. கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் இருக்கும் எரிபொருள் கையிருப்பானது எதிர்வரும் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையிலும் போதுமானதாகும் எனவும் அடுத்தகட்ட எரிபொருள் கையிருப்புக்கான ஆணைகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.