Home இலங்கை அரசியல் ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவளித்த எம்.பிக்கள் ….பொதுத் தேர்தலில் இரண்டாக பிளவு

ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவளித்த எம்.பிக்கள் ….பொதுத் தேர்தலில் இரண்டாக பிளவு

0

ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) ஆதரவளித்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொது தேர்தலில் யாருடன் இணைவது குறித்து தீர்மானம் எடுத்துள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியைப் (UNP) பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்பினருக்கும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவை (SLPP) பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய தரப்பினருக்கும் இடையே எதிர்கால அரசியல் செயற்பாடு தொடர்பில் நேற்று (27) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

கொழும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக குறிப்பிடப்படுகின்றது.

பிரதமர் வேட்பாளர் 

இதன்போது, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் பொதுஜன பெரமுனவில் இணைவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்த ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் (SJS) இணைவதற்குத் தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த சந்திப்பை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட முன்னாள் ஆளுநர் நவீன் திஸாநாயக்க (Navin Dissanayake), எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைய வேண்டும் எனவும் அவ்வாறு கூட்டணி ஒன்று உருவாக்கப்படுமாயின் பிரதமர் வேட்பாளராக சஜித் பிரேதாசவே (Sajith Premadasa) இருப்பார் எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன், இங்கு கருத்துரைத்த முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando), இரு தரப்பினரும் இணைய வேண்டும் என தாம் விரும்புவதாகவும் தற்போது பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுவதுடன் அனைவரும் நாட்டுக்காக ஒன்றிணைய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

வலதுசாரி கூட்டணி

மேலும், குறித்த சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், தங்களது தரப்பு மீண்டும் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தரப்பினருடன் இணையவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இதன்போது கருத்துரைத்த சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga), தங்களது தரப்பு வலதுசாரி கூட்டணி ஒன்றை உருவாக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

அத்துடன், சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள தரப்பினரும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்த தரப்பினரும் இணைந்து கூட்டணி ஒன்றை உருவாக்குவது தொடர்பில் கவனம் செலுத்துகின்றோம் எனவும் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம் சிறிலங்கா பொதுஜன பெரமுனவும் வலதுசாரி கொள்கையை உடைய கட்சியாகும்.

எனவே அவர்களுடன் இணைவதில் எந்த பிரச்சினையும் இல்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version