கனடாவின்- பிராம்ப்டன் நகர முதல்வர் பெட்ரிக் பிரவுனுக்கு நன்றி தெரிவிக்கும்
வகையில் முல்லைத்தீவின் முள்ளிவாய்க்கால் பகுதியில் ஒரு பதாகை
காட்சிப்படுத்தப்பட்டு பின்னர் அகற்றப்பட்டுள்ளது.
கனடாவின் பிராம்ப்டனில் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னத்தை நிறுவியமைக்காக
இந்த பதாகை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரிக்க பொலிஸ் குழு ஒன்று, அந்த
இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், பின்னர் அந்தப் பதாகை
அகற்றப்பட்டுள்ளதாகவும் முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நினைவுச்சின்னம்
முன்னதாக, கடந்த வாரம், ஒன்ராறியோவின் பிராம்ப்டனில் குறித்த நினைவுச்சின்னம்
திறக்கப்பட்டதற்கு இலங்கை தனது கடுமையான ஆட்சேபனைகளை முறையாக
தெரிவித்திருந்தது.
இதுபோன்ற நடவடிக்கைகள், இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான நல்லிணக்கம்
மற்றும் தேசிய ஒற்றுமை முயற்சிகளை சிக்கலப்படுத்துகின்றன மற்றும்
குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன என்று இலங்கை அரசாங்கம்
குறிப்பிட்டிருந்தது.
இலங்கையின் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் கொழும்பில் உள்ள கனேடிய
உயர்ஸ்தானிகரை அழைத்து, ஆதாரமற்ற இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் மற்றும்
கனடாவில் நினைவுச்சின்னம் நிறுவுவது குறித்து இலங்கை அரசாங்கத்தின் கவலைகளை
வெளிப்படுத்தியிருந்தார்.
