புதிய அரசமைப்பு, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் உள்ளிட்ட
விடயங்களில் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளின் பிரகாரம் உரிய நடவடிக்கை
இடம்பெறும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸதெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தி வழங்கிய 22 உறுதிமொழிகளில்
இதுவரை ஒன்றுதான் நிறைவேற்றப்பட்டுள்ளது என ஆய்வு நிறுவனம் ஒன்று தகவல்
வெளியிட்டுள்ளது.
எனவே, வழங்கிய வாக்குறுதிகளை இந்த அரசு நிறைவேற்றும் என நம்ப
முடியுமா?
புதிய அரசமைப்பு மற்றும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் பற்றியும்
அவதானம் செலுத்தப்படுமா? என்று எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே
அமைச்சர் இவ்வாறு கூறினார்.
உறுதிமொழிகளை விரைவில் நிறைவேற்றுவோம்..
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்களுக்குப் பல உறுதிமொழிகளை வழங்கினோம். அவற்றில் சிலவற்றைத் தேர்வு
செய்து, அதில் இத்தனைதான் நிறைவேற்றப்பட்டுள்ளது எனக் கூறுவது அநீதியாகும்.
நாம் வழங்கிய மொத்த உறுதிமொழிகளை ஒப்பிட்டு, அவற்றுள் நிறைவேற்றப்பட்டுள்ளவை
எவை என்றே பார்க்க வேண்டும். இலக்கம் முக்கியம் அல்ல. எமது பயணம் எதை நோக்கி,
எவ்வாறு சென்று கொண்டிருக்கின்றது என்பதே முக்கியம்.
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின் பிரகாரம் நாம் செயற்பட்டு வருகின்றோம்.
இது மக்களுக்கும் தெரியும். அதேபோல் உறுதிமொழிகளை மீறிப் பயணிப்போமானால்
அதற்கு எதிராக மக்கள் குரல் கொடுப்பார்கள்.
புதிய அரசமைப்புக்குரிய நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. தேர்தல் முறைமை
மாற்றம் உட்பட பல மாற்றங்கள் மக்களின் விருப்பத்தின் அடிப்படையில் இடம்பெறும்.
சர்வஜன வாக்கெடுப்பில் மக்கள் அங்கீகரித்தால் புதிய அரசமைப்பு நடைமுறைக்கு வரும் என குறிப்பிட்டுள்ளார்.
