பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு (Aruna Jayasekara) எதிராக எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த தனது முடிவை எதிர்வரும் தினத்தில் அறிவிப்பதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) தெரிவித்துள்ளார்.
இன்று (19) இடம்பெறும் நாடாளுமன்ற நடவடிக்கைகளின் போதே சபாநாயகர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட 31 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை ஓகஸ்ட் 12 ஆம் திகதி தன்னிடம் ஒப்படைக்கப்பட்டதாக சபாநாயகர் உறுதிப்படுத்தினார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை
அதன்படி, நம்பிக்கையில்லாப் பிரேரணையில் சேர்க்கப்பட்டுள்ள விடயங்களை ஆய்வு செய்து, எதிர்காலத்தில் இது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சபைக்கு அறிவிப்பதாக சபாநாயகர் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது கிழக்கு மாகாண தளபதியாகப் பணியாற்றிய அருண ஜயசேகர, தற்போது பாதுகாப்பு பிரதி அமைச்சராக இருப்பது, அத்தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவித்து அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
