நாட்டில் போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெட்ரோலிய வளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரையில் பயன்படுத்தக் கூடிய எரிபொருட்கள் கையிருப்பில் உள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜானக ராஜகருணா(Janaka Rajakaruna) தெரிவித்துள்ளார்.
திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட கப்பல்
அண்மையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட எரிபொருள் கப்பல் ஒன்று திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
இவ்வாறு திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட எரிபொருள் கப்பல் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமானது அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவிற்கு சொந்தமான யுனைடட் பெட்ரோலியம் நிறுவனத்தினால் கடந்த 2ஆம் திகதி தருவிக்கப்பட்ட எரிபொருள் கப்பல் இவ்வாறு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பலில் தலா 15000 மெற்றிக்தொன் எடையுடைய பெட்ரோல் மற்றும் டீசல் கொண்டு வரப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் உள்ளகப் பிரச்சினை காரணமாக எரிபொருள் கப்பல் தரையிறக்கப்படாது திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக ஜனக ராஜகருணா தெரிவித்துள்ளார்.