Home இலங்கை அரசியல் அரச அலுவலர்கள் குறித்து வடக்கு ஆளுநர் கவலை

அரச அலுவலர்கள் குறித்து வடக்கு ஆளுநர் கவலை

0

அரச அலுவலர்களிடம் அதுவும் புதிதாக பதவியேற்ற நிர்வாக அலுவலர்கள் சிலரிடம்
மக்களை பழிவாங்கும், அலைக்கழிக்கும் சிந்தனை இருப்பதை நான் அவதானித்தாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கவலை வெளியிட்டுள்ளார்.

நேற்று (17) மன்னார் (Mannar) நகர
சபை மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

முன்பு குறைந்தளவு பணியாளர்கள்

மாவட்டச் செயலராக கடந்த காலத்தில் தான் இருந்தபோது கூட இவ்வாறு
பொதுமக்கள் சந்திப்பதற்கு வரவில்லை என்றும் சிறிய விடயங்களுக்கும் இப்போது
ஆளுநர் அலுவலகத்துக்கு வருகின்றார்கள் எனவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

அந்தப்
பொதுமக்கள் தங்களது பிரதேசங்களிலுள்ள அரச திணைக்களங்களில் சேவையைப்
பெற்றுக் கொள்ள முடியவில்லை என்று வருவதாகச் சுட்டிக்காட்டிய ஆளுநர்,
பொதுமக்கள் தினமான நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை (16) இரவு 8 மணியைத்
தாண்டியும் பொதுமக்களைச் சந்தித்து அவர்களின் தேவைகளை
நிறைவேற்றிக் கொடுத்திருந்தேன் எனவும் தெரிவித்துள்ளார்.

முன்னைய காலத்தில் குறைந்தளவு பணியாளர்களுடன் மக்களுக்கு திறம்பட சேவைகள்
வழங்கப்பட்டதாகவும் இப்போது அதிகரித்த ஆளணி மற்றும் கணினி வளங்கள் இருந்தாலும்
மக்களுக்கு சிறப்பான சேவைகள் வழங்கப்படவில்லை என்று ஆளுநர் வருத்தத்தை
வெளியிட்டுள்ளார்.

மக்கள் தமது பிரதேச அல்லது கீழ்நிலை அலுவலர்களின் ஊடாக ஒரு சேவையைப்
பெற்றுக்கொள்ள முடியவில்லை என மேல்நிலை அலுவலர்கள் அல்லது திணைக்களத்
தலைவர்களிடம் சென்றால், அந்த தேவையை நிறைவேற்றிக் கொடுக்க மறுக்கின்ற
கீழ்நிலை அலுவலர்கள் இப்போது இருக்கின்றார்கள் எனச் சுட்டிக்காட்டிய ஆளுநர்,
இவர்களால் எப்படி இப்படிச் சொல்ல முடிகின்றது என்ற கேள்வியை எழுப்பியதுடன்
இவர்களின் மனநிலையை நினைத்து கவலையடைவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version