Home இலங்கை அரசியல் எம்மைத் தூற்றியவர்களுக்கு எம் மீது திடீரெனக் காதல்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

எம்மைத் தூற்றியவர்களுக்கு எம் மீது திடீரெனக் காதல்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

0

யாழ்ப்பாணம் (Jaffna) மாவட்டத்தின் ஒரு சில உள்ளூராட்சி சபைகளில் தேசிய மக்கள் சக்தி (NPP) ஆட்சியமைப்பதற்கான சூழல் ஏற்பட்டிருப்பதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்தார்.

எங்களைத் தூற்றி இனவாத ரீதியாக தங்களின் இருப்பைத் தக்க வைத்துக்கொண்ட எந்தவொரு அணியுடனும் சேரப்போவதில்லை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

யாழ்.காங்கேசன்துறை (KKS) தொடருந்து நிலையத்தில் பொதிகள் போக்குவரத்து சேவை நேற்று (08) ஆரம்பித்து வைக்கப்பட்ட போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப்
பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தீர்மானம் மிக்க சக்தி

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தற்போது பல்வேறு உள்ளூராட்சி சபைகளில் தீர்மானம் மிக்க சக்தியாக தேசிய மக்கள்
சக்தி உள்ளது. ஆட்சி அமைப்பது தொடர்பில் பல்வேறு தரப்புகள் எங்களோடு
உரையாடுகின்றார்கள். இதுவரை காலமும் எங்களுக்கு எதிராக ஓரணியில் திரண்டு தூற்றியவர்கள் இன்று
எங்களைக் காதலுடன் பார்க்கின்றார்கள்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உருவாக்கப்படவுள்ள எந்தவொரு உள்ளூராட்சி சபை
நிர்வாகங்களுக்கும் இடையூறாக நாங்கள் இருக்கமாட்டோம். கடந்த காலங்களில்
எங்களைத் தூற்றி இனவாத ரீதியாக தங்களின் இருப்பைத் தக்க வைத்துக் கொண்ட எந்தவொரு
அணியுடனும் சேரப்போவதில்லை.

யாழ். மாவட்டத்தின் ஒரு சில உள்ளூராட்சி சபைகளில் தேசிய மக்கள் சக்தி
ஆட்சியமைப்பதற்கான சூழல் ஏற்பட்டிருக்கின்றது. அதற்கான முயற்சிகளை நாங்கள்
கண்டிப்பாக மேற்கொள்வோம்.

யாழ். மாநகர சபையில் (Jaffna Municipal Council) நாங்கள் போட்டியிடுவோமாக இருந்தால் மேயர் வேட்பாளராகக்
கபிலனையே நிறுத்துவோம்” என தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version