யாழ். மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆட்சியமைக்க தேசிய மக்கள் சக்தி ஆதரவளிக்கவுள்ளது என்ற தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என்று தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாநகரசபை உறுப்பினர் சு. கபிலன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் சில உள்ளூராட்சி சபைகளில் தமிழரசுக் கட்சி ஆட்சியமைக்கத் தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது என சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த விடயங்கள் அனைத்தும் போலியானவை.தேர்தல் காலத்திலும் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக மக்கள் மத்தியில் வதந்திகளைப் பரப்பியவர்கள் தேர்தலிற்குப் பின்னரான ஆட்சிமைப்பிற்குட்பட்ட இக்காலத்திலும் மக்கள் மத்தியில் வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள்.
தேசிய மக்கள் சக்தி
எமது மக்களை வதந்திகள் மூலமாக வழிநடாத்தி நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றி பெற்றதாகக் கருதும் எந்தவொரு சுயநல அரசியல் கட்சிகளுடனும் கூட்டுசேரவோ இணைந்து பயணிக்கவோ தேசிய மக்கள் சக்தியினராகிய நாம் முன்வரப்போவதில்லை என்பதை எமது மக்களிற்கு பொறுப்புடன் அறியத் தருகின்றோம்.
எமது மக்கள் வழங்கியுள்ள ஆணையின் பிரகாரம் எமக்கு வாக்களித்த மக்கள் வாக்களிக்காத மக்கள் என்ற பேதமின்றி ஒவ்வொருவரும் சமூகம் சார்ந்தும், பிராந்தியம் சார்ந்தும் உயர்பெற வலுவான எதிரணியாக செயற்படுவோம் எனத் தெரிவித்துள்ளார்.
