தமிழ் மக்கள் கூட்டணியின் தேசிய மகாநாட்டில் நாங்கள் யாவரும் தமிழ்ப் பொது
வேட்பாளருக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எமது வாக்குகளை அளிப்போம்
என்று உறுதி பூணுவோம் என கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற
உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் (C.V.Vigneswaran) தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மகாநாட்டில் உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பிழையான கருத்துக்கள்
மேலும் குறிப்பிடுகையில், “எமது முதலாவது தேசிய மகாநாட்டுக்கு இங்கு வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும்
எமது வரவேற்பையும் அன்பையும் தெரிவித்து என் உரையைத் தொடங்குகின்றேன்.
நாம் எமது தேசிய மகாநாட்டை நடத்த வேண்டும் என்று
முடிவெடுத்த போது சம்பந்தன் உயிருடன் இருந்தார். இன்று அவர்
இல்லையே என்ற மனோநிலை பிரதிபலிக்கின்றது.
எது எவ்வாறிருப்பினும்
அரசியலில் விருப்பமில்லாத என்னை அரசியலுக்குக் கொண்டு வந்தவர் சம்பந்தனே.
அவர் செய்த செயலால் இன்று நீதித்துறை, நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கத்துறை
மூன்றிலும் அங்கம் வகித்த ஒருவர் என்ற பெருமை என்னைத் தேடி வந்துள்ளது. அவரை
இத்தருணத்தில் நினைவு கூருவது சாலப் பொருந்தும் என்று நினைக்கின்றேன்.
நாம் யாவரும் தமிழர்களாக சிந்தித்தால் எமது
வாரிசுகளின் வருங்காலம் பற்றிய கரிசனை எம்மை கட்டாயமாக ஆட்கொள்ளும். “நாங்கள்
இன்று சொகுசாக வாழ்ந்துவிட்டுப் போவோம், நாளை எமது பிள்ளைகளுக்கும், தமிழ்
மக்களுக்கும் என்ன நடந்தால் எமக்கென்ன” என்று சிந்திப்பவர்கள் தான் பல பிழையான
கருத்துக்களை தமிழ் மக்களிடையே விதைத்து வருகின்றார்கள்.
தமிழ்ப் பொது வேட்பாளர்
இந்நாட்டில் எமது சிங்கள வேட்பாளருக்குத் தமிழ் மக்கள் வாக்களித்தால் அது
ஒற்றுமையாகாது. அது சிறுபான்மையினரின் பயத்தின் அறிகுறியே.
எமக்கு ஒரு அரசியல் யாப்பு உதயமாக வேண்டும்.
தமிழ்ப்பேசும் மக்கள் வேண்டுவது ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் கீழான 13வது
திருத்தச் சட்டத்தை அல்ல. எமக்கு சர்வதேசச் சட்டத்தின் கீழ் தரப்பட்டிருக்கும்
சுயநிர்ணய உரிமையையே நாங்கள் கேட்கின்றோம்.
தமிழ்ப் பொது வேட்பாளர் இந்தக்
கருத்தையே தமிழ்ப்பேசும் மக்களிடையே முன்னிறுத்த இருக்கின்றார்.
ஐக்கிய நாடுகள் மக்கள் தீர்ப்பைக் கோரி தேர்தல் நடத்தட்டும். தமிழ்ப்பேசும்
மக்கள் எதனைக் கோருகின்றார்களோ அதனை வழங்க ஐக்கியநாடுகள் முன்வரவேண்டும் என்ற
கருத்தை சர்வதேசத்தின் முன் முன்னிலைப்படுத்தவே தமிழ் பொது வேட்பாளர் காத்து
நிற்கின்றார்.
ஆகவே எங்களுடைய கட்சியின் இந்த தேசிய மகாநாட்டில் நாங்கள் யாவரும் தமிழ்ப்
பொது வேட்பாளருக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எங்களின் வாக்குகளை
அளிப்போம் என்று உறுதி பூணுவோமாக!
இது பற்றிய தீர்மானம் இன்று சமர்ப்பிக்கப்பட
இருக்கின்றது. எமது அரசியல் குறிக்கோள்களைப் பிரதிபலிக்கும் தீர்மானங்களும்
இன்று சமர்ப்பிக்கப்படுகின்றன.அவற்றை எம்மவர் ஒரு மனதாக இன்று ஏற்றுக்
கொள்வார்கள் என்று நம்புகின்றேன்” என்றும் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.