Courtesy: Sivaa Mayuri
ஜனாதிபதி தேர்தலின் போது செய்தது போன்று பொதுத் தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் அமைதியை பேணுமாறு பொதுமக்களிடம், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கையான பெப்ரல் (PAFFREL) இன்று வலியுறுத்தியுள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி, எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு விசேட ஆயத்தங்கள் எதுவும் தேவையில்லை எனவும், எனினும் கண்காணிப்பு நடவடிக்கைகள் வழமை போன்று தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலைக் கண்காணிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதியாக யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்பதை தாம் தெளிவாக புரிந்துகொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளனார்.
வேட்புமனு தாக்கல்
இந்தநிலையில், வேட்புமனு தாக்கல் காலத்தில் மாவட்ட அளவில் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடங்கும் என்று அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னும் பின்னும் தேர்தல் சட்ட மீறல்கள் எதுவும் பதிவாகவில்லை, இது நாட்டுக்கு சாதகமான அம்சமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, அரச அதிகாரங்களும் சொத்துக்களும் பெருமளவிற்கு துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வேட்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டது என்று ரோஹன ஹெட்டியாராச்சி குற்றம் சுமத்தினார்.