அம்பேபுஸ்ஸ – திருகோணமலை வீதியில் பெலிகமுவ மஹா கடே சந்திக்கு அருகில் இன்று (21) இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கலேவெலவிலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், நாய் ஒன்றுடன் மோதியதில், கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், அவருடன் பயணித்த பெண் மற்றும் ஒரு சிறுவன் காயமடைந்து கலேவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழப்பு
எனினும், ஓட்டுநர் மற்றும் பெண் பயணி மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.
அதன்போது, 31 வயது கணவன் மற்றும் 21 வயதுடைய மனைவியுமான தெஹியத்தகண்டிய பகுதியில் வசிக்கும் தம்பதியொன்றே உயிரிழந்துள்ளது.
மேலதிக விசாரணை
இதேவேளை, தம்பதியரின் ஒன்றரை வயது மகன் காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், உயிரிழந்த தம்பதியினரின் சடலங்கள் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கலேவெல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
