Home இலங்கை அரசியல் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்னும் ஒரு பொது அதிகாரி – நீதிமன்றில் தகவல்

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்னும் ஒரு பொது அதிகாரி – நீதிமன்றில் தகவல்

0

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்ந்து பொது
அதிகாரியாக பதவி வகிப்பதாகவும், அதிகாரங்களை பிரிக்கும் கொள்கைக்கு கடுமையான
அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் சட்டமா அதிபர் மேன்முறையீட்டு
நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார்.

அர்ச்சுனா, நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றும் தகுதியை எதிர்த்து தாக்கல்
செய்யப்பட்ட நீதிப்பேராணை மனுவின் விசாரணையின் போது, முன்னிலையான மேலதிக
மன்றாடியார் நாயகம் சுமதி தர்மவர்தன இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.

கடுமையான அச்சுறுத்தல்

பொதுவாக நாடாளுமன்ற உறுப்பினராக ஒரே நேரத்தில் பணியாற்றும் ஒரு பொது அதிகாரி
அதிகாரங்களைப் பிரிக்கும் கொள்கைக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக
அவர் குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய ஒரு சந்தர்ப்பத்தில், அர்ச்சுனா ஒழுக்காற்று விசாரணை காரணமாக
சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும் சட்டமா அதிபர்
நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

அந்த வகையில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சேவையிலிருந்து இடைநீக்கம்
செய்யப்பட்டுள்ளார் என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் ஏற்கனவே நீதிமன்றத்தில்
தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.

பொது அதிகாரியாக உள்ள அர்ச்சுனா

இதற்கிடையில், மனுதாரர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி, நாடாளுமன்றஉறுப்பினர் அர்ச்சுனா நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கும்,
நாடாளுமன்றத்தில் அமர்ந்து வாக்களிப்பதற்கும் தகுதியற்றவர் என்று
குறிப்பிட்டுள்ளார்.

ஏனெனில் அவர் இன்றுவரை ஒரு பொது அதிகாரியாகவே இருப்பதாக அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இந்த விவகாரத்தில் இறுதித் தீர்ப்பு வரும் வரை, குறிப்பிட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் தனது பணியில் செயல்படுவதைத் தடுக்கும் வகையில் முறையான
அறிவிப்புகளை வெளியிட்டு இடைக்கால நிவாரணம் வழங்குமாறு அவர் நீதிமன்றத்தை
வலியுறுத்தியுள்ளார்.

இந்தநிலையில் குறித்த விசாரணையின் அமர்வு 2025 ஜூலை 2ஆம் திகதிக்கு
ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version