இலங்கையிலுள்ள இரண்டு தனியார் வங்கிகளுக்கு அபராதம் விதித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
சம்பத் வங்கி பிஎல்சீ (Sampath Bank PLC) மற்றும் டிஎப்சிசி வங்கி பிஎல்சி (DFCC Bank PLC) ஆகிய இரண்டு வங்கிகளுக்கே, மத்திய வங்கி, இவ்வாறு அபராதம் விதித்துள்ளது.
அதன்படி சம்பத் வங்கிக்கு (Sampath Bank PLC) இருபது இலட்சம் ரூபாயும், டிஎப்சிசி வங்கிக்கு (DFCC Bank PLC) பத்து இலட்சம் ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வங்கிகளுக்கு அபராதம்
நிதியியல் கொடுக்கல் வாங்கல் அறிக்கையிடல் சட்டம் மற்றும் 2016ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க நிதியியல் நிறுவனங்களின் (வாடிக்கையாளர் உரிய விழிப்புக்கவனம்) விதிகள் ஆகியவற்றுடன் இணங்குவதற்கு தவறியமைக்காகவே டிஎப்சிசி வங்கிக்கு (DFCC Bank PLC) தண்டப்பணம் விதிக்கப்பட்டதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதேவேளை நிதியியல் கொடுக்கல் வாங்கல் அறிக்கையிடல் சட்டத்தையும் உரிய வாடிக்கையாளர் விழிப்புக் கவன விதிகளையும் கடைப்பிடிப்பதற்கு தவறியமைக்காகவே சம்பத் வங்கிக்கு (Sampath Bank PLC) நிருவாகத் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் 2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல் வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் 19(2)ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 19(1)ஆம் பிரிவின் கீழ் உரித்தளிக்கப்பட்ட அதிகாரங்களின் பயனைக்கொண்டு, நிதியியல் கொடுக்கல் வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுகாத நிறுவனங்கள் மீது, நிதியியல் அபராதங்கள் விதிக்கப்படுவதாக, இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.