Home இலங்கை அரசியல் வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் ஜனாதிபதியை வணங்கும் மக்கள்

வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் ஜனாதிபதியை வணங்கும் மக்கள்

0

 நாடாளுமன்றில் வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சமர்ப்பித்ததனை தொடர்ந்து மக்கள் அவரை வணங்குகின்றார்கள் என ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள கோரிக்கை 1700 ரூபாவாக இருந்தது எனவும் வரவு செலவு திட்டத்தில் இந்தத் தொகை 1750 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் பெருந்தோட்ட மக்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாடி மகிழ்கின்றனர் எனவும் சிலர் ஜனாதிபதியின் புகைப்படத்தை வணங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வாழ்க்கையில் அடைந்த மிகப்பெரிய சந்தோஷம் இது எனவும், இவ்வாறான ஒரு நடவடிக்கையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த வெற்றிகளை தாங்கிக் கொள்ள முடியாத எதிர்க்கட்சியினர் ஒவ்வொரு தலைப்புக்களை சமூக ஊடகங்களில் போட்டு மக்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த விடயம் தொடர்பில் நாங்கள் பதற்றம் அடைய தேவை இல்லை என்பதே எனது நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சியினரை பதற்றமடைய செய்யக்கூடிய ஒரு வரவு செலவு திட்டத்தை அரசாங்கம் சமர்ப்பித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீழ்த்தப்பட்ட இந்த நாட்டை கட்டி எழுப்பும் முயற்சிக்கு அனைத்து தர்பினரும் சாதகமான ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

இதேவேளை, ஹட்டன் நகரில் ஜனாதிபதியின் புகைப்படம் பொறிக்கப்பட்ட பதாகையை நபர் ஒருவர் வணங்கும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

ஹட்டன்ந கர அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபா வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்வதாக ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

இந்த நடவடிக்கையை வரவேற்கும் வகையில் ஹட்டன் நகர மணிக்கூட்டு கோபுரத்தின் அருகாமையில் ஜனாதிபதியை வாழ்த்தி பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட இடத்தில் பட்டாசு கொளுத்தி தங்களது மகிழ்ச்சியை சிலர் வெளிப்படுத்தியிருந்தனர்.
இதன் போது ஒருவர் ஜனாதிபதியின் புகைப்படம் பொறிக்கப்பட்ட பதாகையை விழுந்து வணங்கும் காட்சிகளே இவ்வாறு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. 

NO COMMENTS

Exit mobile version