தமிழ் அரசியல் பரப்பில் மிகவும் மூத்த அரசியல்வாதியாக திகழ்ந்த இராஜவரோதயம் சம்பந்தன் நேற்று இரவு உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.
இவர் குறிப்பாக 1977ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் திருகோணமலை தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்.
அதன் பின்னர் 1983ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தை புறக்கணித்தனர்.
மூன்று மாதங்கள் தொடர்ந்து நாடாளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றாமல் போனதால் சம்பந்தன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை 1983, செப்டம்பர் 7 இல் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதனையடுத்து 1989ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஊடாக திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்ட சம்பந்தனால் தேர்தலில் வெற்றியீட்ட முடியாமல் போனது.
ஓரங்கட்டப்பட்ட சம்பந்தன்
இதேபோல, தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் ஈபிஆர்எல்எப், டெலோ உள்ளிட்ட சில கட்சிகள் இணைந்து 2001ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒரு புதிய கூட்டணி உருவாக்கப்பட்டதன் பின்னர், 2004ம் ஆண்டில் கூட்டமைப்பு சார்பாக 18 வருடங்களின் பின்னர் மீண்டும் சம்பந்தன் நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்.
2001இல் இருந்து சமகாலம் வரை தொடர்ச்சியாக நாடாளுமன்றத்திற்கு சம்பந்தன் தெரிவாகியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு திருகோணமலையில் தமிழர்களின் இருப்பையும் எதிர்காலத்தையும் கருத்திற் கொண்டு சம்பந்தனுக்கு பொறுப்பை வழங்கினர்.
2001ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைக்கப்பட்ட சிறிது காலத்திற்கு பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பாக கூட்டமைப்பு செயற்படுகின்றது என்று எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி விலகியிருந்தார்.
அத்தோடு, 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயருடன் போட்டியிடுவதற்கு ஆனந்தசங்கரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களை அனுமதிக்காததால் சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு 22 ஆசனங்களைப் பெற்றனர்.
இந்தநிலையில்தான், 2004ஆம் ஆண்டு இலங்கை தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் கூட்டமைப்பினர் போட்டியிட்டனர். இதன் போது தமிழரசுக் கட்சியின் தலைவராக சம்பந்தன் இருந்தமை குறிப்பிடத் தக்கது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும் விடுதலைப் புலிகளின் ஆசியோடு சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டு நீண்ட நெடிய காலம் தலைமைப் பதவியை வகித்து வந்தார்.
தொடர்ந்து வந்த தேர்தல்களிலும் சம்பந்தன் வெற்றிப் பெற்று வந்ததுடன், 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் உடல்நலக் குறைவு காரணமாக தேர்தல் பணிகளில் இருந்து விலகியிருந்தாலும் கூட மீண்டும் வெற்றிப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்.
இதன்பின்னர், நடைபெற்ற சம்பவங்கள் மிக முக்கியமானவையாக பார்க்கப்படுகின்றது. குறிப்பாக தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஒரு செவ்வியொன்றின் போது, “தலைமைப் பதவியில் இருக்கும் சம்பந்தன் விலக வேண்டும் எனவும், வயது முதிர்ச்சியின் காரணமாக தொடர்ச்சியாக சம்பந்தனுக்கு நாடாளுமன்றத்திற்கு வர முடியாது. இதனால் அவர் பதவி விலக வேண்டும்” எனவும் தெரிவித்திருந்தார்.
திடீரென சம்பந்தன் பதவி விலக வேண்டும் என சுமந்திரன் கூறியது சம்பந்தனுக்கு ஒரு பாரிய ஏமாற்றமாக அமைந்தது. இதன்போது, தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்திலும் இது தொடர்பில் கலந்தாலோசிக்கப்படுகின்றது. அத்தோடு, சம்பந்தனோடு கதைத்து பதவி மாற்றம் செய்வதற்காக ஒரு குழுவும் அமைக்கப்படுகின்றது. இந்தக் குழு தொடர்பில் சிவிகே. சிவஞானம் ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியிருந்தார்.
இதற்கு முன்னர் இருந்த தந்தை செல்வா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வயது முதிர்ந்தாலும் கூட கட்சிக்குள் மிகவும் மரியாதையாக நடத்தப்பட்டிருக்கின்றனர். இவ்வாறான நிலையில், நீண்ட அரசியல் வரலாற்றைக் கொண்ட சம்பந்தன் பதவி விலக வேண்டும் என்று கூறி அவரின் இறுதிக் காலத்தில் அரசியல் ரீதியாக அவரை துன்பத்திற்குள் உள்ளாக்கிய சம்பவங்கள் இடம்பெற்றிருந்தமை சம்பந்தனை மனதளவில் மிகவும் பாதித்ததாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, சிவிகே.சிவஞானம் ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது, “சம்பந்தன் கட்சிக்குள் சிறிது சிறிதாக ஓரங்கட்டப்படுவதை கண்டு நொந்து வேதனையடைந்திருக்கின்றோம். இதனை நாங்கள் கண்கூடாக கண்டிருக்கின்றோம். எங்களது, கண்முன்பாகவே தமிழரசுக் கட்சிக்குள் சம்பந்தன் அவமதிக்கப்படுவதை நாங்கள் அறிந்திருக்கின்றோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சம்பந்தன் பதவி விலக வேண்டும் என்பதை சுமந்திரன் ஊடகங்களில் குறிப்பிட்டமைக் கூட தமிழர் அரசியல் பரப்பில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதன்போது, “இலங்கை தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவருடைய முதுமையின் பொருட்டு நடைமுறை அரசியலில் பங்களிப்புச் செய்யமுடியாதிருப்பதனால் அவர் தனது பதவியைத் துறக்க வேண்டும்.
சம்பந்தனின் முதுமை காரணமாக அவர் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்துக்கு வருகை தரமுடியாதிருக்கின்றமை தொடர்பில் நாங்கள் கரிசனைகளைக் கொண்டிருக்கின்றோம்.
விசேடமாக நான் அந்த விடயத்தில் கரிசனைகளைக் கொண்டிருக்கின்றேன்.
அந்த வகையில் நான் ஒருவிடயத்தினை இந்தச் சந்தர்ப்பத்தில் பகிரங்கமாக தெரிவிக்க விரும்புகின்றேன்.
சில ஆண்டுகளுக்கு முன்னதாக அவரால் நாடாளுமன்றத்துக்கு சமூகமளிக்க முடியாத நிலைமைகள் ஏற்பட ஆரம்பித்த சந்தர்ப்பத்தில் நான் சம்பந்தனிடத்திலேயே நேரடியாக பதவி விலகுமாறு கோரினேன். அதன்போது சம்பந்தன் அதனை நிராகரித்திருந்தார். அத்துடன், அவர் அதற்கான காரணத்தினையும் தெளிவு படுத்தினார்.
2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது திருகோணமலை மக்கள் தன்னை அந்த மாவட்டத்தின் முதலாம் நபராக தெரிவு செய்திருக்கின்றார்கள். அவர்கள் எனது உடல்நிலைமைகளை அறிந்தே தெரிவு செய்திருக்கின்றார்கள் என்று சம்பந்தன் என்னிடத்தில் குறிப்பிட்டார்.
அதனை சம்பந்தன் மீண்டும் நினைவு படுத்தினார்.
எனினும், திருகோணமலை மக்களை பிரதிநிதித்துவம் செய்து செயற்படுத்தப்பட வேண்டிய பல விடயங்கள் உள்ளன. பிறிதொரு பிரதிநிதியை நாங்கள் நியமித்தாலும் அவர் முழுமையான செயற்பாடுகளை ஆற்றுவரா என்பது பற்றிய பல கரிசனைகள் உள்ளன.
எவ்வாறாயினும், சம்பந்தனின் முதுமை காரணமாக அவரால் செயற்பாட்டு ரீதியான விடயங்களை முன்னெடுக்க முடியாதுள்ளது.
ஆகவே, அவர் பதவியைத் துறக்க வேண்டும் என்பது தான் எனது தனிப்பட்ட கருத்தாகவுள்ளது. அடுத்துவரும் காலத்தில் அதுதொடர்பான சில நடவடிக்கைளை எடுப்போம்” என சுமந்திரன் பகிரங்கமாகவே அறிவித்திருந்தார்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில், சம்பந்தன் தொடர்பான சுமந்திரனின் கருத்துக்கள் பல விமர்சனங்களையும் கட்சிக்குள்ளேயே தோற்றுவித்திருந்துடன், சம்பந்தனிடத்திலும் கூட பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கலாம். இது சம்பந்தன் ஆதரவளாளர்களிடத்திலும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.
அத்துடன், நீண்ட காலம் கட்சியில் இருந்த சம்பந்தனை கட்சியின் வஞ்சித்து விட்டனர் என்ற ஒரு விசனம் சம்பந்தனின் குடும்பத்தாரிடத்திலும் இருந்ததாக கூறப்படுகின்றது. அதேசமயம், அவர் மரணமடைந்துள்ள இந்த காலப்பகுதிக்கு சிறிது முன்னர் பதவி விலக வேண்டும் என்ற அழுத்தம் அவருக்கு அதிகமாக இருந்ததாக கூறப்படுகின்றது.
பல அரசியல் தலைவர்கள் தமிழ் தேசிய அரசியல் இருந்து தங்களது வயது முதிர்வு காரணமாக மிகவும் கௌரவமாக விடைபெற்றுச் சென்ற நிலையில், சம்பந்தனை ஒரு வெறுக்கக் கூடிய நபராக தமிழரசுக் கட்சி ஆக்கிவிட்டது என்று அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.
இதேசமயம், சம்பந்தனின் அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று கருதிய பலர் இன்று சம்பந்தனின் மரண வீட்டில் தங்களை மிகச் சிறந்த ஆளுமைகளாக காட்டிக் கொள்ள முயல்வதாகவும், தங்களது இருப்பை தக்க வைத்துக் கொள்ள சம்பந்தனின் மரண வீட்டையும் தங்களது சாதகமாக பயன்படுத்தி பலர் அரசியல் செய்ய முயல்வதாகவும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன..