துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையை அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடமிருந்து (Bimal Rathnayake) நீக்குவதற்கான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தீர்மானத்தை நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) வரவேற்றுள்ளார்.
சுங்க திணைக்களத்தில் சோதனைக்குட்படுத்தப்படாமல் விடுவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு பிமல் ரத்நாயக்கவிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைய (10) நாடாளுமன்ற அமர்வில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் மீது நம்பிக்கை
இந்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “இந்த அரசாங்கத்தின் மீது மக்களுக்கு இன்றே நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
விசாரணைகள் நடைபெறும் அமைச்சருக்கு குறித்த அமைச்சில் பதவி வகிப்பது உகந்ததல்ல என்பதால் இந்த நடிவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.
இன்று (10.10.2025) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சில புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்றனர்.
அதன்படி, குறித்த அமைச்சரவை மாற்றத்தில் பிமல் ரத்நாயக்கவுக்கு – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சும் அனுர கருணாதிலகவுக்கு துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சும் வழங்கப்பட்டுள்ளது.
அனில் ஜயந்த பதில்
இந்த நிலையில், அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துப் பொறுப்பு பறிக்கப்படவில்லை எனவும் அரசாங்கத்தின் இலக்குகளை மிகவும் திறம்பட அடையும் வகையில் அவை மாற்றியமைக்கப்பட்டதாகவும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த இன்று தெரிவித்தார்.
அத்துடன் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் புதிய மற்றும் மேலதிக பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அது விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கொள்கலன் சம்பவத்தின் காரணமாக அமைச்சர் ரத்நாயக்க நீக்கப்பட்டாரா என்ற சந்தேகத்தை எழுப்பிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கூறிய கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக பிரதி அமைச்சர் இவ்வாறு கூறினார்.
உதய கம்மன்பில முறைப்பாடு
இன்று அறிவிக்கப்பட்ட அமைச்சரவை மாற்றத்தைத் தொடர்ந்து, முன்னர் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த பிமல் ரத்நாயக்க, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில நேற்றைய தினம் (09.10.2025) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகி குறித்த கொள்கலன்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
