Home இலங்கை சமூகம் நாட்டின் பல பகுதிகளில் தபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

நாட்டின் பல பகுதிகளில் தபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

0

நாட்டிலுள்ள அனைத்து தபாலகங்கள் மற்றும் உப தபால் அலுவலக ஊழியர்கள்
பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு ஆதரவாக நுவரெலியா மற்றும் நானுஓயாவிலும் தபாலகங்கள் மற்றும் உப தபால்
அலுவலக ஊழியர்கள் தமது சேவையில் இருந்து விலகி (18) பணிப்புறக்கணிப்பில்
ஈடுபட்டு வருகின்றனர்.

தபால் ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவு, நிர்வாக அலுவலகம் மற்றும் கணக்காய்வு
அலுவலகங்களில் ஊழியர்களின் பணியை ஆரம்பிக்கும் நேரம் மற்றும் வெளியேறும் நேரம்
என்பவற்றை கைவிரல் அடையாள இயந்திரங்களில் பதிய வேண்டும் என்ற
அறிவுறுத்தல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தல் உள்ளிட்ட 19 கோரிக்கைகளை
முன்வைத்து தபால் ஊழியர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்து
வருகின்றனர்.

எனினும் இந்த பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக தபால் சேவை மற்றும் அலுவலக கடிதப்
பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியாத நிலையும், பல்வேறு தேவைகளின் பொருட்டு தபால்
நிலையத்திற்கு வருகை தந்த பொதுமக்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என பலரும்
ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது.

இதனால் தபால்
நிலையங்களுக்கு சேவைகளை பெற வந்த மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு
வருகின்றனர்.

செய்தி – செ.திவாகரன்

அம்பாறை

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம்
மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியால் ஆரம்பிக்கப்பட்ட
பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு
கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை அவர்கள்
தொடங்கினர். இதற்கமைய இன்று (18) அம்பாறை மாவட்டத்தில் உள்ள பல தபால் நிலையங்கள்
மூடப்பட்டிருந்தன.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் வகையில் கிழங்கு
மாகாணத்தின் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உப தபால் நிலைய அஞ்சல்
அதிபர்கள் ஊழியர்கள் ஆதரவளித்தமையினால் தபால் அலுவலக சேவைகள் யாவும்
முடங்கியுள்ளன.

இதன்படி அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிரதான
தபாற்கந்தோர் தவிர 12 தபால் நிலையங்கள் குறித்த பணி பகிஸ்கரிப்பு காரணமாக
மூடப்பட்டிருந்ததுடன் இவ்வேலை நிறுத்தத்தின் காரணமாக கல்முனை பிரதேச
பொதுமக்கள் மற்றும் மாணவர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்ட நிலையை
அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

அத்துடன் பாதுகாப்பு தரப்பினர் பாதுகாப்பு
நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதையும் காண முடிகின்றது.

செய்தி – சிஹான் பாரூக்

ஹட்டன்

தொழிற்சங்க போராட்டம் காரணமாக ஹட்டன் நகரில் உள்ள தபால் நிலையம் உட்பட மலையக
பகுதியில் உள்ள சகல தபால் நிலையங்களும் பூட்டு போடப்பட்டிருந்தன.

பெருபாலானவர்கள் தங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக
தபால் நிவையம் சென்று ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதனை காணக்கூடியதாக இருந்தது.

19 கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (17) மாலை 4.00 மணி முதல் இந்த
பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை அவர்கள் தொடங்கினர்.

மத்திய தபால் பரிமாற்றத்தில் தொடங்கிய இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம்
நேற்று நள்ளிரவு 12 மணி முதல் நாடு தழுவிய அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

இதன் விளைவாக, இன்று அனைத்து தபால் செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டிருந்தன.

இருப்பினும், குறித்த பணிப்புறக்கணிப்பு தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற ஊடக
சந்திப்பில், கருத்து தெரிவித்த தபால்மா அதிபர் ருவன் சத்குமார, தபால்
ஊழியர்களின் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட நிலையில், இதுபோன்ற
பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவது நியாயமற்றது என கூறியிருப்பதும்
குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version